சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை படகில் ஏற்றிய காவலர்கள் - என்ன நடந்தது?
இலங்கையில் திட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அனுராதபுர சிறையில் நீர் புகுந்தது. பாதுகாப்பு நடவடிக்கையாக கைதிகளை மார்பளவு நீரில் படகில் ஏற்றிய காவல்துறையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திட்வா புயலின் எதிரொலியாக இலங்கை முழுவதும் நீடித்த கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் வெள்ளம் புகுந்துள்ளது.
சிறைக்குள் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, இலங்கை காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று, படகுகளில் ஏற்றப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக காவலர்கள் துப்பாக்கிகளுடன் கைதிகளை கண்காணித்து படகில் ஏற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த வெள்ளப்பெருக்கில் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பாதிப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது. நவம்பர் 29 (சனிக்கிழமை) இரவு நிலவரப்படி, இடர் முகாமைத்துவ நிலையம் (DMC) வெளியிட்ட அறிக்கையின்படி, 159 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு மாகாணத்தை நோக்கி 60–70 கிமீ/மணி வேகத்தில் நகர்ந்த புயல், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக் குளத்தின் 12 வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாழ் நிலப்பரப்பில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், 1000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இடர் முகாமைத்துவ நிலையம் தொடர்ந்து புதிய தகவல்களை சேகரித்து வருவதாகவும், பாதிப்புகளின் அளவு நொடிக்கு நொடி அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Editorial Staff