இலங்கையை உலுக்கிய தம்பதி படுகொலை; வெளியான அதிர்ச்சி தகவல்
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த வயதான தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள், முன்னாள் நகை வர்த்தகரான எஸ். காளிமுத்து சத்திவேல் (82) மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி (82) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தத் தம்பதி முன்னதாக ஒரு நகை வர்த்தக நிலையத்தை நடத்தி வந்ததாகவும், பின்னர் அதனை மூடிவிட்டு, வர்த்தக ஸ்தாபனத்தின் பின்புறமுள்ள தமது வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த தம்பதியின் பிள்ளைகள், தமது பெற்றோருக்குத் தொலைபேசியில் அழைப்புகளை மேற்கொண்டபோதும், அவர்கள் பதிலளிக்காததால், அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், அருகிலுள்ள வர்த்தக ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் கடையைத் திறந்து பார்த்தபோதுதான், கணவனும் மனைவியும் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
வீட்டுக்குள் கொள்ளையடிக்க வந்த எவராவது இந்தத் தம்பதியினரைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், தடயவியல் பரிசோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, சந்தேகநபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.