3.5 பில்லியன் ஆண்டுகால மர்மம் உடைந்தது – செவ்வாய் மண்ணில் ஒளிந்திருந்த இரகசியம்!
செவ்வாய் கிரகத்தின் மண்ணில் ஒளிந்திருந்த 3.5 பில்லியன் ஆண்டுகால மர்மம் இப்போது உடைந்துள்ளது. நாசாவின் கியூரியோசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தின் ‘கேல் கிரேட்டர்’ (Gale Crater) பகுதியில் ஆய்வு செய்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குப் பலதரப்பட்ட கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்னர் கண்டறியப்படாத ஏழு புதிய மூலக்கூறுகள் உட்பட மொத்தம் 21 வகையான கரிமச் சேர்மங்களை இது அடையாளம் கண்டுள்ளது.
சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான பாறைகளில் இருந்து இந்த மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை ‘மேரி அன்னிங்’ (Mary Anning) என்று பெயரிடப்பட்ட ஒரு பாறை மாதிரியைத் துளையிட்டு எடுத்த கியூரியோசிட்டி, அதை ஒரு வேதித் திரவத்தில் (TMAH) கரைத்து ஆய்வு செய்தது. இந்தப் புதிய ஆய்வு முறையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான கரிம மூலக்கூறுகளைக் கண்டறிய உதவியுள்ளது.
இந்த ஆய்வில், டிஎன்ஏ (DNA) மற்றும் ஆர்என்ஏ (RNA) ஆகியவற்றின் முன்னோடியாகக் கருதப்படும் ‘நைட்ரஜன் ஹீட்டோரோசைக்கிள்’ (Nitrogen heterocycle) எனப்படும் கரிம வளையங்கள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
செவ்வாய் கிரகம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு கிரகமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கான மிக வலுவான ஆதாரமாக இந்தக் கண்டுபிடிப்பு பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் புகழ்பெற்ற ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ (Nature Communications) இதழில் வெளியிடப்பட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.