சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

Published on: 08 Feb 2026, 04:38 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராசர் மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நடத்த உள்ள மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு சேலத்தில் காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வரும் விஜய், சேலத்தில் வருகிற 13 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.

இந்த கூட்டத்திற்கு அனுமதி கோரி கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ. பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் கடந்த வாரம் போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில் மகுடஞ்சாவடி மற்றும் சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாகன நிறுத்தத்திற்கு போதிய இட வசதி இல்லையெனக் குறிப்பிடப்பட்டதுடன், கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி கட்சி நிர்வாகிகள் தேவையான ஏற்பாடுகளை செய்து, நேற்று இரவு மீண்டும் அனுமதி கோரி கடிதம் வழங்கினர். இதையடுத்து சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராசர் மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பிப்ரவரி 13 ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW