பனிச்சிறுத்தையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை; அதிர்ச்சி சம்பவம்

பனிச்சறுக்கு வீராங்கனையான அந்த இளம்பெண், தனது விளையாட்டை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு பனிச்சிறுத்தையை கண்டுள்ளார்.
பனிச்சிறுத்தையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை; அதிர்ச்சி சம்பவம்

வடக்கு சீனாவில் வனவிலங்கிற்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், பனிச்சிறுத்தையின் திடீர் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், வடக்கு சீனாவின் Fuyun County பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Keketuohai UNESCO Global Geoparkயின் தலட் கிராமப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பனிச்சறுக்கு வீராங்கனையான அந்த இளம்பெண், தனது விளையாட்டை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு பனிச்சிறுத்தையை கண்டுள்ளார். அதன் அழகில் கவரப்பட்ட அவர், ஆபத்தை உணராமல் அதற்கு மிகவும் நெருக்கமாக சென்று செல்ஃபி எடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் ஆவேசமடைந்த பனிச்சிறுத்தை, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து பெண்ணின் முகத்தை நோக்கி தாக்கியுள்ளது. அங்கு இருந்த பனிச்சறுக்கு பயிற்சியாளர் ஒருவர் உடனடியாக தனது பனிச்சறுக்குக் கம்புகளை வேகமாக அசைத்து சிறுத்தையை விரட்டியடித்ததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்தபோது அந்தப் பெண் தலைக்கவசம் அணிந்திருந்ததால், முகம் மற்றும் தலையில் ஏற்படக்கூடிய கடுமையான காயங்களிலிருந்து தப்பியுள்ளார். தற்போது அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வனவிலங்குகளை சந்திக்கும் போது அவற்றுடன் செல்ஃபி எடுக்க முயல்வதோ அல்லது மிக அருகில் செல்வதோ உயிருக்கு ஆபத்தானது என உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையும் பொதுமக்களுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர