“8 பெண்களுக்கு மரண தண்டனை?” – டிரம்ப் குற்றச்சாட்டை மறுத்த ஈரான்

Published on: 23 Apr 2026, 11:29 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஈரானில் 8 பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக டிரம்ப் கூறியதை ஈரான் அரசு மறுத்துள்ளது. சிலர் விடுவிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் மீது வழக்குகள் தொடரப்படுவதாகவும் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

“8 பெண்களுக்கு மரண தண்டனை?” – டிரம்ப் குற்றச்சாட்டை மறுத்த ஈரான்

டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது. ஈரானில் 8 பெண்கள் தூக்கு தண்டனைக்கு உள்ளாக உள்ளனர் என்ற தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ஈரான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுமார் 40 நாட்கள் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு, தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் காலக்கெடு முடிவடைந்தபோதும், அதை நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானில் நடைபெற்ற தொடக்க கட்ட பேச்சுவார்த்தை எந்த முடிவும் இன்றி முடிவடைந்தது. இருப்பினும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சூழலில், ஈரானில் மரண தண்டனைக்கு உள்ளாகும் பெண்களை விடுவிக்க வேண்டும் என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் கோரிக்கை விடுத்தார். சமூக ஊடக செயற்பாட்டாளர் இயால் யகோபி வெளியிட்ட தகவலின் அடிப்படையில், 8 பெண்கள் தூக்கு தண்டனையை எதிர்கொள்கிறார்கள் என்று கூறப்பட்டது.

இதனை தனது Truth Social தளத்தில் பகிர்ந்த டிரம்ப், ஈரான் தலைவர்களிடம் அந்த பெண்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். இது இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு மறுத்துள்ளது. அந்நாட்டின் நீதித்துறை வெளியிட்ட விளக்கத்தில், டிரம்ப் தவறான தகவலால் வழிநடத்தப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் பெண்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், சிலர் மீது வழக்குகள் விசாரணையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூட, இறுதியில் சிறை தண்டனை மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW