உங்க சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை தவறவிடாதீங்க!
நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கின்றன. குறிப்பாக உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் உணவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அந்த வகையில், உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய பணியை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன.
சிறுநீரகம் சிறுநீர் உருவாக்கம், உடலின் வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற செயல்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையாகவே தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ளும் திறன் இருந்தாலும், சில உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிட்ரஸ் வகை பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கின்றன. மேலும், சிறுநீரில் அமில அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன.
வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறி. இதனை உணவில் சேர்ப்பதால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். மேலும், இது சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
செலரி குறைந்த கலோரி கொண்ட காய்கறியாகும். இது இயற்கையான சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சிறுநீரகங்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சிறுநீரகங்களை பாதுகாக்க தண்ணீர் மிகவும் அவசியமானது. தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க உதவுவதுடன், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
மேலும், சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன. உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதால், இவ்வகை உணவுகள் சிறுநீரகங்களை பாதுகாக்க உதவுகின்றன.
அதனால், சிறுநீரகங்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க மேற்கண்ட உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
