குரு பெயர்ச்சி 2026: பொதுப் பலன்களும் எதிர்வரும் மாற்றங்களும்

2026-ஆம் ஆண்டில் குரு பகவான் கடக ராசிக்கு மாறுவதால் உலகுக்கும் நாட்டுக்கும் கிடைக்கவிருக்கும் பொதுப் பலன்களை விளக்கும் கட்டுரை. விவசாய முன்னேற்றம், பெண்களின் அதிகாரப் பதவிகள், புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், வாகன உற்பத்தி வளர்ச்சி எனப் பல துறைகளிலும் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.


குரு பெயர்ச்சி 2026: பொதுப் பலன்களும் எதிர்வரும் மாற்றங்களும்

ஆசிரியரை தெய்வமாக நினைத்து அவரின் வழிகாட்டுதலின்படி படித்துச் சாதிக்கும் மாணவர் எல்லாம் குரு பகவானின் அம்சத்தில் வந்தவர்கள்தான். ஊருக்கே அச்சுறுத்தல்கள் இருந்தாலும், பொய் வழக்குகள் போட்டு வாட்டி வதைத்தாலும் உண்மையை ஊருக்கே உரக்கச் சொல்லும் உத்தமர்களின் உள் மனதில் உட்கார்ந்திருப்பவர் இந்தக் குரு பகவான்தான்.

உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இறைவனின் திருநாமத்தை இடைவிடாமல் உச்சரித்துக்கொண்டு கடும் விரதமிருந்து கடவுளைக் காண முயல்பவர்களுக்குப் பலம் தருபவர் குரு பகவான்தான். 

வருமானத்தை மறைக்காமல் அரசுக்குச் சரியாக வருமான வரி செலுத்துவோரின் நேர்மைக்குள் நிற்பவரும் இவரே. விளையாட்டு மைதானத்தில் எதிரணியை வெல்லும் போதெல்லாம் தன் தாய்நாட்டின் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தி நிற்கும் விளையாட்டு வீரனின் நாட்டுப்பற்றுக்குள் நாற்று விட்டு வளர்ப்பவரும் இந்தக் குரு பகவான்தான். எங்கெல்லாம் ஒழுக்கம், மனிதாபிமானம், தெய்வீகம் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் குரு பகவான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்பதே இதன் பொருள்.

அள்ள அள்ளக் குறையாத தனம், தானியம், செல்வம் எல்லாம் அவர் அருளிருந்தால் நமக்குக் கிடைக்கும். நாட்டுப்பற்றுடன் நாட்டைக் காப்பாற்ற நல்ல பிள்ளையை ஒருவர் பெற்றெடுக்கிறார் என்றால் அவரும் குரு பகவானின் ஆசீர்வாதத்தில் இருக்கிறார் என்பது பொருளாகும்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர் போல, கடக ராசியில் உச்சம் பெற்று உயிர்களை உய்விக்க வந்துவிட்டார் பிரகஸ்பதியாகிய வியாழ பகவான். இந்தப் பெயர்ச்சியால் மீண்டும் விவசாயத்தை நோக்கி உலக மக்களின் பார்வை திரும்பும். விவசாயிகள் முக்கியத்துவம் பெறுவர்; அவர்களுக்குச் சலுகைகளும் கிடைக்கும். சந்திரனின் வீட்டில் குரு அமைவதால் சந்திரனின் இரண்டாம் எண் முக்கியத்துவம் பெறும். நாடெங்கும் பெண்கள் அதிகாரப் பதவிகளில் அமர்வார்கள். கூட்டுக் குடும்பம் மற்றும் பாரம்பரிய உணவுகளுக்கு மரியாதை திரும்பும்.

வாகன உற்பத்தி அதிகரிக்கும்; வாகனங்களின் விலை குறையும். தண்ணீர் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும். தீர்க்கவே முடியாது என்று நினைத்திருந்த நோய்களுக்கு (புற்றுநோய் போன்றவை) மருந்து கண்டுபிடிக்கப்படும். மூப்புத் திரையிலிருந்து விடுபட்டுத் தீர்க்காயுசுடன் வாழ வழிவகுக்கும் மருந்துகள் அறிமுகமாகும். மக்களிடையே மனமகிழ்ச்சி அதிகரிக்கும். காலப்புருஷ தத்துவத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமர்வதால், சொந்த வீடு எல்லோருக்கும் அமையும்.

குரு பகவான் விருச்சிக ராசியைப் பார்ப்பதால், அறிவியல், இயற்பியல் மற்றும் வானவியல் கண்டுபிடிப்புகள் பிரமிக்க வைக்கும். ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பொற்காலமாக அமையும். நாடுகளிடையே மூண்டுவரும் எல்லைப் பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வரும். ஆறு, ஏரி, கடல் சார்ந்து நிலவும் சண்டைகள் தீரும். கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும்.

நீரால் சூழ்ந்த நிலப்பகுதி வீடான மகர ராசியை குரு பகவான் பார்ப்பதால், தீவுகள் மற்றும் தீபகற்பங்கள் செழிப்படையும். கடற்கரை மற்றும் ஆற்றங்கரை நகரங்களும் நாடுகளும் வளர்ச்சியடைந்து நவீனமாகும். புதுத் தொழிற்சாலைகளும் தொழில் நகரங்களும் அமையும். அரசியல்வாதிகளின் கை ஓங்கும்.

குரு பகவான் மீன ராசியைப் பார்ப்பதால், கப்பல் கட்டும் தொழில் மற்றும் மீன்பிடித் தொழில் வளர்ச்சியடையும். பெட்ரோல், டீசல் விலை உயரும்; எண்ணெய் உற்பத்தி அதிகமாகும். தங்கத்தின் விலை உயரும். அக்டோபர் 31, 2026 முதல் டிசம்பர் 6, 2026 வரை குருவும் கேதுவும் சேர்வதால், ஒரு மாதத்துக்குள் பிரிவுகள் ஏற்பட்டுச் சண்டைகள் வரும்.

நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குரு பகவான் சிம்ம ராசியில் அமர்வதால் பொருளாதார மந்தநிலையும், தொற்று நோயும் அதிகரிக்கும். மீண்டும் கடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழுந்து, எரிபொருள் எண்ணெய் விலை உயர்வும் மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்படும். பழ வகைகள் மற்றும் தங்கத்தின் விலை குறைந்து பின்னர் உயரும்.

பணத் தட்டுப்பாடும் தீ விபத்துகளும் அதிகரிக்கலாம். சர்க்கரை மற்றும் அரிசி விலை குறையும். மூத்த அரசியல் தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு முடிசூட்டுவர். ஆலமரமாக இருந்து கோலோங்கிய சிலர் அரசியலை விட்டு விலகுவர்.

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களை நோக்கிப் புதிய செயற்கைக் கோள்களை இந்தியா ஏவும். ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகள் வேலையில் அமர்த்தப்படுவர். AI (செயற்கை நுண்ணறிவு) ஆதிக்கம் ஓங்கும். குருவுக்கு எட்டாம் இடத்தில் சனி நிற்பதால், வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் வந்து பின்னர் விலகும்.

இந்தக் குருப் பெயர்ச்சியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட காலமாகத் திருமணம் தள்ளிப்போனவர்களுக்குத் திருமணம் முடியும்; அதேபோல் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். குடும்பத் தொழில் மற்றும் தந்தையாரின் தொழிலுக்கு இளைஞர்கள் திரும்புவர். நகரங்களை ஒட்டியிருக்கும் பகுதிகள் விரைந்து வளரும். மொத்தத்தில், இந்தக் குருப் பெயர்ச்சி பயம் கலந்த சந்தோஷத்தைத் தருவதாக அமையும்.

பொறுப்புத் துறப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. வாசகர்கள் இதனைப் பொழுதுபோக்குக்காக மட்டுமே ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க