கன்னியாஸ்திரிகளாக மடத்துக்கு சென்ற யுவதிகள் காதலுடன் வெளியேறி, திருமண தம்பதிகளாகினர்!

Published on: 03 Jun 2026, 11:10 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தனது பாட்டியின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக, லூயிசாவும் மடத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார்.

கன்னியாஸ்திரிகளாக மடத்துக்கு சென்ற யுவதிகள் காதலுடன் வெளியேறி, திருமண தம்பதிகளாகினர்!

பிரேசிலில் உள்ள ஒரு கத்தோலிக்க மடத்தில் கன்னியாஸ்திரிகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய இரு இளம்பெண்கள், தற்போது காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

லூயிசா சில்வேரியோ மற்றும் பிரான்சிலியா கோஸ்டா ஆகிய இருவரும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் உள்ள ஒரு மடத்தில் சந்தித்தனர். 19 வயதில் துறவறப் பயிற்சி மாணவியாக லூயிசா அங்கு சேர்ந்தபோது, பிரான்சிலியா ஏற்கெனவே ஐந்து ஆண்டுகளாக அங்கு தங்கி இறையியல் படித்துக் கொண்டிருந்தார். 

சுவாரஸ்யமாக, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதன்முதலில் சந்தித்தபோது பரஸ்பரம் வெறுப்பையே உமிழ்ந்துள்ளனர். ஒருவரை ஒருவர் "தலைக்கனம் பிடித்தவர்" என்று நினைத்ததாக அவர்கள் நினைவு கூர்கின்றனர்.

காலப்போக்கில் இவர்களது வெறுப்பு நட்பாகவும், மரியாதையாகவும் மாறியது. எனினும், கொவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட அச்சம் மற்றும் மனநலப் பாதிப்புகள் காரணமாக பிரான்சிலியா தனது துறவற வாழ்க்கையை மறுபரிசீலனை செய்தார். அதேபோல், தனது பாட்டியின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக, லூயிசாவும் மடத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார்.

மடத்திலிருந்து வெளியேறிய பிறகு, பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்காக இருவரும் ஒரே வீட்டில் தங்கினர். ஒரு மாலைப் பொழுதில் 'லவ் இன் வெரோனா' (Love in Verona) என்ற காதல் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பிரான்சிலியா தனது காதலை லூயிசாவிடம் வெளிப்படுத்தினார். மடத்தில் இருந்தபோதே இவர்கள் தங்களை இருபாலின ஈர்ப்புடையவர்களாக (Bisexual) உணர்ந்திருந்தாலும், அது அவர்களின் மத நம்பிக்கையைப் பாதிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ள இந்தத் தம்பதி, தங்களின் பாலியல் ஈர்ப்பும் மத நம்பிக்கையும் பிரிக்க முடியாதவை என்று நம்புகின்றனர். "நம்ப முடியாததாகத் தோன்றினாலும், இந்த உலகத்தில் ஒரு மன்மதன் இருக்கிறார் என்றால், எங்களைப் பொறுத்தவரை அது கடவுள்தான்" என்று பிரான்சிலியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

இந்தத் தம்பதியினர் தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாகத் தங்களைப் போன்ற கேள்விகள் உள்ள மற்றவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். திருச்சபை இவர்களின் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், தங்களுக்குத் தெரிந்தவர்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைகளைத் தாங்கள் பெற்றுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW