மதிய நேரத் தூக்கம் – ஆரோக்கியத்திற்கு நன்மையா? தீமையா?

தூக்கமின்மை பல உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாகும். அதே நேரத்தில், மதிய உணவுக்குப் பிறகு பலருக்கும் சோர்வு மற்றும் மந்தநிலை உணர்வு ஏற்படுவது இயல்பு. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும்.
மதிய நேரத் தூக்கம் – ஆரோக்கியத்திற்கு நன்மையா? தீமையா?

தூக்கம் என்பது உடலும் மனமும் சீராக செயல்பட அவசியமான அடிப்படை தேவையாகும். ஒரு நாள் கூட சரியாக உறங்கவில்லை என்றால் சோர்வு, எரிச்சல் மற்றும் கவனக்குறைவு போன்றவை ஏற்படும். பொதுவாக ஒரு நாளுக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை உறங்குவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தூக்கமின்மை பல உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாகும். அதே நேரத்தில், மதிய உணவுக்குப் பிறகு பலருக்கும் சோர்வு மற்றும் மந்தநிலை உணர்வு ஏற்படுவது இயல்பு. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும்.

பலர் மதிய உணவுக்குப் பிறகு சிறிய தூக்கத்தை விரும்புகிறார்கள். சிறிது நேரம் உறங்கினால் மீதமுள்ள நாள் புத்துணர்ச்சியுடன் கழிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. ஆனால் மதிய நேரத் தூக்கம் உண்மையில் நன்மையா அல்லது தீமையா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

சில ஆய்வுகள், மதிய நேரத்தில் 60 முதல் 90 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாக தூங்குவது இரவு தூக்கத்தின் தரத்தை பாதிக்கக்கூடும் என்று கூறுகின்றன. நீண்ட நேர மதிய தூக்கம் இரவில் தூங்குவதைக் தாமதப்படுத்தலாம். மேலும், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அதிக நேரம் பகலில் தூங்குபவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிகம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பகல் தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது இரவு தூக்க முறையை பாதிக்கிறதா என்ற விவாதமும் எழுகிறது.

அதே சமயம், குறுகிய மதிய தூக்கத்திற்கு சில நன்மைகளும் உள்ளன. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு ‘குட்டித் தூக்கம்’ மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இது மனநிலையை மேம்படுத்தி, செயல்திறன் மற்றும் கவனத்தை உயர்த்துகிறது. குறிப்பாக இரவில் போதுமான தூக்கம் கிடைக்காதவர்கள் அல்லது அதிக கவனம் தேவைப்படும் பணியில் இருப்பவர்கள் குறுகிய மதிய தூக்கத்தால் பலன் அடையலாம். மேலும், இது மனஅழுத்த ஹார்மோன்களை குறைத்து உடலின் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவாக செயல்படலாம்.

ஆனால் நீண்ட நேர மதிய தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, உடல்நிலை மற்றும் வேலை நேரம் போன்றவற்றைப் பொறுத்து தூக்கத்தின் தேவையும் மாறுபடும். பகலில் அதிகமாக தூங்க வேண்டிய நிலை தொடர்ந்து இருந்தால், அது உடல்நலக் குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, தனிப்பட்ட உடல்நலத்தை கருத்தில் கொண்டு சரியான தூக்க முறையை பின்பற்றுவது முக்கியம்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர