பெண்களின் பிறப்புறுப்பு அரிப்பு: உண்மையான காரணங்கள் என்ன?
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், அந்தரங்கப் பகுதியில் அதிக வியர்வை அல்லது முடி வளர்ச்சி காரணமாகவும், சில நேரங்களில் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது பொதுவான ஒன்றாகும். இந்த அரிப்பு சில சமயம் எரிச்சலாக மாறி, சொரியும்போது காயங்களும் ஏற்படலாம். இதற்கு சிலர் மஞ்சள், தேங்காய் எண்ணெய் போன்ற வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தினாலும், முதலில் அரிப்பு ஏற்படுவதற்கான உண்மையான காரணங்களை அறிந்து சரிசெய்வதே முக்கியம்.
பிறப்புறுப்பு அரிப்பு என்பது அந்தப் பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை குறிக்கிறது. சுத்தம் இல்லாததே இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு அந்தரங்கப் பகுதியை முறையாக சுத்தம் செய்யாமல் விட்டால், பாக்டீரியா வளர்ந்து அரிப்பையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றாதது, உடலுறவுக்குப் பிறகு சுத்தம் செய்யாதது போன்றவை இந்த பிரச்சனையை அதிகரிக்கலாம். நீண்ட காலம் கவனிக்காமல் விட்டால், இது வஜினிடிஸ் போன்ற தொற்றாகவும் மாறக்கூடும்.

மேலும், அந்தரங்கப் பகுதியில் உள்ள முடிகளை அடிக்கடி முழுவதுமாக அகற்றுவதும் சரியான பழக்கமல்ல. இந்த முடிகள் இயற்கையாகவே பாக்டீரியாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. முடியை அகற்றுவதால் சிறு கீறல்கள், வறட்சி மற்றும் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையான அளவுக்கு மட்டும் வெட்டிக்கொள்வது பாதுகாப்பானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்ய வலுவான சோப்புகள் அல்லது அதிக வேதிப்பொருட்கள் உள்ள ஜெல்களை பயன்படுத்துவதும் அரிப்புக்குக் காரணமாகலாம். இவை யோனியின் இயல்பான pH அளவை மாற்றி, வறட்சி மற்றும் எரிச்சலை உருவாக்குகின்றன. அதேபோல், சில தோல் நோய்கள் ஏற்பட்டாலும் அந்தப் பகுதியில் சிவத்தல் மற்றும் அரிப்பு தோன்றலாம்.
பாலியல் ரீதியாக பரவும் சில நோய்களும் பிறப்புறுப்பு அரிப்புக்கு காரணமாக இருக்கலாம். பிறப்புறுப்பு மருக்கள், ஹெர்பெஸ், ட்ரைக்கோமோனியாசிஸ் மற்றும் அந்தரங்கப் பேன்கள் போன்ற தொற்றுகள் அரிப்பு, எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
இதற்குப் பின், மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. நீண்ட கால மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையை பாதித்து, தொற்றுகள் எளிதில் ஏற்பட வழிவகுக்கிறது. குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தில் உள்ள பெண்களில், ஹார்மோன் சுரப்பு குறைவதால் யோனி வறண்டு அரிப்பு ஏற்படலாம். எனவே, இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்தால் சுய வைத்தியத்தை தவிர்த்து, மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.
