No Oil No Boil ரெசிபி: அடுப்பே வேண்டாம்! ஆரோக்கியமான இட்லி & சட்னி வீட்டிலேயே செய்யலாம்

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுப்பு இல்லாமல் செய்யக்கூடிய உணவுகள் பற்றி மக்கள் அதிகமாக தேட தொடங்கியுள்ளனர்.
No Oil No Boil ரெசிபி: அடுப்பே வேண்டாம்! ஆரோக்கியமான இட்லி & சட்னி வீட்டிலேயே செய்யலாம்

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுப்பு இல்லாமல் செய்யக்கூடிய உணவுகள் பற்றி மக்கள் அதிகமாக தேட தொடங்கியுள்ளனர். வீடுகளில் சமையல் செய்வதற்கே சிரமமாக இருக்கும் சூழ்நிலையில், அடுப்பும் எண்ணெயும் தேவையில்லாத ஆரோக்கியமான உணவுகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிலும் குறிப்பாக காலை உணவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் இட்லியை கூட அடுப்பில்லாமல் செய்யலாம் என்றால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் அவல் மற்றும் தேங்காய்ப்பால் பயன்படுத்தி, வேகவைக்காமல் மென்மையான இட்லி தயாரிக்கலாம். அதேபோல், அடுப்பு இல்லாமல் செய்யக்கூடிய சுவையான சட்னியையும் சேர்த்து சாப்பிடலாம். இந்த எளிய முறையை வீட்டில் யாரும் முயற்சி செய்து பார்க்கலாம்.

இந்த ரெசிபி கேஸ் சேமிக்க மட்டுமல்ல, எண்ணெய் இல்லாததால் உடல்நலத்துக்கும் நல்லது. விரைவாக செய்ய முடியும் என்பதால் வேலைப்பளு அதிகமானவர்களுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

இட்லி செய்ய தேவையானவை:
அவல் – 1 கப்
தேங்காய் பால் – 1½ கப்
உப்பு – தேவையான அளவு

சட்னி அரைக்க தேவையானவை:
தேங்காய் – கால் கப்
சின்ன வெங்காயம் – 20
வர மிளகாய் – 4
தக்காளி – 1
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

இட்லி செய்வதற்கு அவல் ஒரு கப் எடுத்து சுத்தம் செய்து மிக்சியில் நன்றாக அரைக்க வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் கெட்டியான தேங்காய்பால் சேர்த்து உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தேங்காய்பால் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். மாவு தண்ணீராக இருக்கக்கூடாது, கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

பின்னர் இந்த மாவை இட்லி தட்டில் வைக்கும் மாதிரி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி போட்டு சுமார் அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். சில நேரத்தில் அது நன்றாக இறுகி மென்மையான இட்லி போல மாறிவிடும்.

சட்னி செய்வதற்கு தேங்காய், சின்ன வெங்காயம், வரமிளகாய், தக்காளி மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் அரைத்தால் சுவையான சட்னி தயார்.

இவ்வளவுதான், அடுப்பு இல்லாமல், எண்ணெய் இல்லாமல், வேகவைக்காமல் செய்யக்கூடிய ஆரோக்கியமான இட்லி மற்றும் சட்னி ரெடி. கேஸ் தட்டுப்பாடு இருக்கும் காலத்தில் இந்த மாதிரி ரெசிபிகள் வீட்டில் கண்டிப்பாக உதவும்.

இந்த ரெசிபியை நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர