இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க… உங்களுக்கு குடல் அழற்சி நோய் இருக்கலாம்!

இன்றைய வாழ்க்கை முறையில் வயிற்று வலி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் பலருக்கும் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க… உங்களுக்கு குடல் அழற்சி நோய் இருக்கலாம்!

இன்றைய வாழ்க்கை முறையில் வயிற்று வலி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் பலருக்கும் அடிக்கடி ஏற்படுகின்றன. இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அலட்சியமாக விடும் பழக்கம் பலரிடமும் உள்ளது. ஆனால் இந்த அறிகுறிகள் சில நேரங்களில் உடலுக்குள் உருவாகும் தீவிர நோய்களின் ஆரம்ப எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

அந்த வகையில், நமது குடல்களை நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கியமான மருத்துவ நிலை தான் குடல் அழற்சி நோய். இது ஒருமுறை ஏற்பட்டால் நீண்ட காலம் அல்லது வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய நோயாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பே குடல் செல்களை தாக்குவதால், குடலில் தொடர்ந்து வீக்கம், சேதம் மற்றும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

குடல் அழற்சி நோய் பொதுவாக இரண்டு வகைகளாக காணப்படுகிறது. ஒன்று அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி, மற்றொன்று கிரோன் நோய். மருத்துவ ஆய்வுகளின் படி, இந்த நோய் இரைப்பை மற்றும் குடல் பாதையை மட்டும் அல்லாமல், உடலின் பிற பகுதிகளையும் பாதித்து கடுமையான உடல் நல சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.

இந்த நோயின் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று இரத்தம் கலந்த மலம். இதனை பலர் பைல்ஸ் அல்லது மூல நோயாக நினைத்து கவனிக்காமல் விடுவார்கள். ஆனால் இது குடல் அழற்சி நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் காட்டும் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். அதோடு, இது குடல் புற்றுநோய் போன்ற பிற நோய்களுடனும் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

உணவு உண்ட பிறகு அடிக்கடி குமட்டல் ஏற்படுவதும் இந்த நோயின் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். குடலில் ஏற்படும் சுருக்கம் மற்றும் அடைப்புகளால் இந்த பிரச்சனை உருவாகும். இதேபோல், காரணம் தெரியாமல் மூட்டு வலி ஏற்படுவதும் சிலருக்கு தோன்றக்கூடும். குறிப்பாக முழங்கால், மணிக்கட்டு அல்லது கீழ் முதுகு பகுதிகளில் வலி நீண்ட நாட்கள் நீடித்தால், அதை சாதாரண வலியாக நினைக்கக் கூடாது. சில நேரங்களில் சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றி மறைவதும் காணப்படும்.

தொடர்ச்சியான வயிற்று வலியும் குடல் அழற்சி நோயின் ஒரு முக்கிய அடையாளமாகும். வயிற்று வலி பல காரணங்களால் ஏற்படலாம் என்பதால், பலர் இதை சாதாரண செரிமான கோளாறாக எண்ணி புறக்கணித்து விடுகின்றனர். ஆனால் குடலில் தீவிர தொற்று அல்லது அடைப்பு இருந்தால், இந்த வலி தொடர்ந்து ஏற்படும். இவ்வாறு அடிக்கடி வயிற்று வலி இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும், அடிக்கடி அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது, குறிப்பாக நள்ளிரவில் தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு ஏற்படுவது கூட குடல் அழற்சி நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இதனால் தூக்கக் குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம்.

எனவே, இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்து தெரிந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சையை தொடங்குவது மிகவும் முக்கியம். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால், இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

பொறுப்புத் துறப்பு: மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான சுகாதார விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இவை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் துல்லியத்திற்கோ முழுமைக்கோ உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகக் கருதப்படக் கூடாது. எந்தவொரு உடல்நலப் பிரச்சனையையும் கண்டறியவோ அல்லது சிகிச்சை மேற்கொள்ளவோ முன்பாக, தகுதியான மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையை அவசியமாக பெற வேண்டும்.