IND vs NZ: “உண்மையான கேப்டன் யார்?” – சுப்மன் கில்லைக் கடுமையாக விமர்சித்த இயன் ஸ்மித்
இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து, தொடரையும் இழந்தது.
இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து, தொடரையும் இழந்தது. இந்த தோல்வியை விட, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடுகள் தான் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளன. நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித், கில்லின் கேப்டன்சியை வெளிப்படையாகவும் கடுமையாகவும் விமர்சித்தார்.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணிக்கு, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா மூலம் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. முதல் இரண்டு ஓவர்களிலேயே நியூசிலாந்து தொடக்க வீரர்கள் வெளியேற, இந்திய அணி போட்டியை கட்டுப்பாட்டில் வைத்தது போலத் தோன்றியது. ஆனால் அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது.
58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டாரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை கடுமையாக தாக்கியது. நான்காவது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, இந்திய அணியை முற்றிலும் பின்னடைவுக்கு தள்ளியது. இந்த நெருக்கடியான சூழலில் பார்ட்னர்ஷிப்பை உடைக்க எந்தத் திட்டமும் இல்லாமல் கேப்டன் சுப்மன் கில் திணறியது தெளிவாகப் புலப்பட்டது.
நியூசிலாந்து வீரர்கள் தொடர்ந்து ரன்களை குவித்துக் கொண்டிருந்த வேளையில், பந்துவீச்சாளர்களுடன் ஆலோசனை நடத்துவதும், பீல்டிங் மாற்றங்களைச் செய்வதும் விக்கெட் கீப்பர் KL Rahul மூலம் நடைபெற்று வந்தது. குறிப்பாக 43வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்துவீசும்போது, ராகுல் அவருடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். அதே சமயம், கேப்டன் சுப்மன் கில் லாங்-ஆஃப் திசையில் தூரத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனை கவனித்த இயன் ஸ்மித், நேரலையில் கில்லைக் கடுமையாகச் சாடினார். “சுப்மன் கில் கேப்டன்சியை இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. ஆனால், அணிக்கு நெருக்கடி வரும் நேரங்களில் கேப்டன் தான் முடிவுகளின் மையமாக இருக்க வேண்டும். லாங்-ஆஃப் பவுண்டரியில் நின்று கொண்டு இருப்பது, அவரை ஆட்டத்தின் முக்கிய தருணங்களிலிருந்து விலக்கி விடுகிறது” என்று அவர் கூறினார்.
மேலும், “அர்ஷ்தீப் சிங்கிடம் பேசிக் கொண்டிருப்பது கேப்டன் அல்லது வைஸ்-கேப்டன் செய்ய வேண்டிய வேலை. ஆனால் அந்த பொறுப்பை கே.எல். ராகுல் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் போது, உண்மையில் கேப்டன் யார் என்ற கேள்வி எழுகிறது. கில் இன்னும் அதிக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றும் ஸ்மித் விமர்சித்தார்.
அதே நேரத்தில், கில்லுக்கு ஆதரவாகவும் ஸ்மித் கருத்து தெரிவித்தார். “இந்திய அணியை வழிநடத்துவது ஒரு இளம் வீரருக்கு எளிதான விஷயம் அல்ல. அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் போன்ற அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன்களும் சீனியர் வீரர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவது கில்லுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் 1-2 எனத் தொடரை இழந்த சுப்மன் கில், தற்போது சொந்த மண்ணிலும் நியூசிலாந்திடம் அதே கணக்கில் தொடரை இழந்துள்ளார். இந்த நிலையில், அவரது கேப்டன்சி குறித்து எழுந்துள்ள இந்த விமர்சனங்கள் பிசிசிஐ கவனத்திற்குச் செல்லுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Editorial Staff