கர்ப்பிணி பெண்களில் அதிகரிக்கும் கர்ப்பகால நீரிழிவு: இலங்கையில் கவலைக்கிடமான நிலை

நாட்டில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது இந்த நீரிழிவு நோய் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கர்ப்பிணி பெண்களில் அதிகரிக்கும் கர்ப்பகால நீரிழிவு: இலங்கையில் கவலைக்கிடமான நிலை

இலங்கையில் கர்ப்பிணி பெண்களில் கணிசமான அளவில் கர்ப்பகால நீரிழிவு நோய் பதிவாகி வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் நீரிழிவு, நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகர் வைத்தியர் மணில்கா சுமனதிலக தெரிவித்துள்ளார். நாட்டில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது இந்த நீரிழிவு நோய் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கர்ப்பத்திற்கு முன் அதிக எடை அல்லது உடல் பருமன் நிலை இருப்பதும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் கர்ப்பகால நீரிழிவு நோய் உருவாவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன எனவும் அவர் விளக்கினார். இந்த நிலையில் நீரிழிவு பாதிப்புடன் இருக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்ட பெண்கள், கர்ப்பம் அடைவதற்கு முன் ஆரோக்கியமான உணவுமுறைகளை பின்பற்றியும், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டும் தங்களின் உடல் எடையை 7 முதல் 10 சதவீதம் வரை குறைத்தால், இந்த அபாயத்தை பெரிதும் குறைக்க முடியும் என வைத்தியர் மணில்கா சுமனதிலக வலியுறுத்தியுள்ளார்.