27 பிரசவங்கள், 69 குழந்தைகள் – உலகமே வியந்த அதிசய தாய், கின்னஸிலும் இடம்பிடித்தார்! அவரின் புகைப்படம் இதோ

ஹைப்பர்ஓவுலேஷன் என்ற அரிய மருத்துவ நிலை காரணமாக, அவர் பல இரட்டையர் மற்றும் மூன்று குழந்தை பிரசவங்களின் மூலம் 44 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
27 பிரசவங்கள், 69 குழந்தைகள் – உலகமே வியந்த அதிசய தாய், கின்னஸிலும் இடம்பிடித்தார்! அவரின் புகைப்படம் இதோ

இன்றைய காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, பாதுகாப்பாக வளர்ப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆனால் நம் அம்மா, பாட்டி காலத்தில் பல பெண்கள் 2 முதல் 10 குழந்தைகள் வரை பெற்றெடுத்து, எந்த பெரிய மருத்துவ வசதிகளும் இல்லாமலே அவர்களை வளர்த்தனர். அதையும் தாண்டி, சில அரிய விதிவிலக்கான பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

இன்றைய உலகில் அதிக குழந்தைகளைப் பெற்று உயிருடன் இருப்பவர் என அறியப்படுபவர் உகாண்டாவைச் சேர்ந்த மரியம் நபாடன்சி. ஹைப்பர்ஓவுலேஷன் என்ற அரிய மருத்துவ நிலை காரணமாக, அவர் பல இரட்டையர் மற்றும் மூன்று குழந்தை பிரசவங்களின் மூலம் 44 குழந்தைகளை பெற்றெடுத்தார். இவர்களில் 38 பேர் தற்போது உயிருடன் உள்ளனர். இது மட்டுமே ஆச்சரியமாகத் தோன்றும் நிலையில், மருத்துவ வசதிகள் மிகக் குறைவாக இருந்த காலத்தில் ஒரு பெண் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்றால் நம்பவே கடினம். ஆனால் அது வரலாற்றில் பதிவான உண்மை.

அந்த அதிசயப் பெண் ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலியேவ். 1725 முதல் 1765 வரை சுமார் 40 ஆண்டுகளில் அவர் 27 முறை பிரசவித்து, மொத்தம் 69 குழந்தைகளுக்கு தாயானார். ரஷ்யாவின் ஷுயா நகரைச் சேர்ந்த அவரும், அவரது கணவர் ஃபியோடர் வாசிலியேவும், உலக வரலாற்றில் “அதிக குழந்தைகளைப் பெற்ற தாய்” என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.

Guinness World Records தகவலின்படி, வாலண்டினா 1707 ஆம் ஆண்டில் பிறந்தவர் மற்றும் ஃபியோடோரின் முதல் மனைவி. அவர் முதன்முதலில் 1725 ஆம் ஆண்டில் குழந்தை பெற்றார்; கடைசியாக 1765 ஆம் ஆண்டில் பிரசவித்தார். இதன் அடிப்படையில், அவர் தனது வாழ்நாளில் நீண்ட ஆண்டுகள் கர்ப்பமாக இருந்திருக்க வேண்டும் என மதிப்பிடப்படுகிறது.

வாலண்டினா நான்கு முறை நான்கு குழந்தைகளையும், ஏழு முறை மூன்று குழந்தைகளையும், பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இந்தப் பிரசவங்களில் ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகள் மட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள பெரும்பாலான குழந்தைகள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி உயிர் பிழைத்தது, அந்த காலகட்டத்தை நினைத்தால் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அவரது கணவர் ஃபியோடர் தனது இரண்டாவது மனைவியுடன் கூடுதலாக 18 குழந்தைகளை பெற்றிருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அந்த காலகட்டத்தில் வெளிவந்த பிரபல பத்திரிக்கையின் எழுத்தாளர் எழுதிய கடிதத்தில் பின்வரும் தகவல் இருந்தது. 1782 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், மாஸ்கோ மாகாணத்தைச் சேர்ந்த 75 வயதான ஃபியோடர் வாசிலியேவ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார் என்றும், அவருக்கு முதல் மனைவி மூலம் 27 பிரசவங்களில் 69 குழந்தைகள் பிறந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஒரு ஆங்கில வணிகர் மூலம் இங்கிலாந்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், பேரரசிக்கு அவரை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டதாகவும் அந்தக் கடிதம் கூறுகிறது.

மேலும், 1834 ஆம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில், நிகோல்ஸ்கி மடாலயத்திலிருந்து மாஸ்கோவுக்கு வந்த பதிவில், ஃபியோடர் வாசிலியேவ் மொத்தம் 87 குழந்தைகளை பெற்றிருந்தார் என்றும், அந்த நேரத்தில் அவர்களில் 82 பேர் உயிருடன் இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் செய்திகள், வாலண்டினா வாசிலியேவின் வாழ்க்கையை உலகின் மிக அபூர்வமான தாய்மையின் எடுத்துக்காட்டாக மாற்றியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர