அமெரிக்க கனவுக்கு பெரிய அதிர்ச்சி: 75 நாடுகளுக்கு குடியேற்ற விசா தடை விதித்த டிரம்ப்
அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற கனவில் இருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கடும் அதிர்ச்சியாக, அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை வெளியிட்டுள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற கனவில் இருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கடும் அதிர்ச்சியாக, அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம், தெற்காசியா உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவது, அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற காரணத்தை முன்வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, குறிப்பிடப்பட்ட 75 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு இனி குடியேற்ற விசா வழங்கப்படாது என்றும், இந்த புதிய நடைமுறை ஜனவரி 21 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகள், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கல்வி, வேலை, குடும்ப இணைப்பு போன்ற காரணங்களுக்காக அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த முடிவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு இந்த உத்தரவால் நேரடி பாதிப்பு ஏற்படாது என கூறப்படுகிறது. ஆனால், அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, உலகளவில் குடியேற்ற கொள்கைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து, டொனால்ட் டிரம்ப் குடியேற்ற விவகாரங்களில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினர் பறித்துக்கொள்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதற்கிடையில், H-1B விசா உள்ளிட்ட வேலை விசா நடைமுறைகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விசா கட்டண உயர்வுக்கு எதிராக ஐடி நிறுவனங்களும் பிற அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குடியேற்ற விசா தடை, அமெரிக்கா செல்லும் கனவை பலருக்கு இன்னும் கடினமாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Editorial Staff