திடீரென அலறிய சிறுமி... தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பிரிந்த 10 வயது மாணவி உயிர்!
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அலைனாவை அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென தாக்கி, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடித்து குதறியது.
பெங்களூருவில் தெருநாய்களின் தாக்குதல் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி அலைனா லோகா (10), தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அலைனாவை அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென தாக்கி, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் நாயை விரட்டியபோதும், அதற்குள் கண், மூக்கு மற்றும் கன்னம் பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டிருந்தன.
உடனடியாக பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக KIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சுமார் 20 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்த மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சியைப் பார்த்து பெற்றோர் நிலைகுலைந்தனர். சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை சிதைந்த நிலையில், இந்த மரணம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக நவநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Editorial Staff