பிரித்தானியாவில் கட்டுப்பாடற்ற ஆபாசப் பயன்பாடு அதிகரிப்பு: தேசிய உத்தி அவசியம் என எச்சரிக்கை

சிலர் மணிக்கணக்கில் ஆபாசப் படங்களை பார்ப்பதன் காரணமாக, தங்களின் அன்றாடப் பணிகளைச் சரியாக நிறைவேற்ற முடியாமல் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் கட்டுப்பாடற்ற ஆபாசப் பயன்பாடு அதிகரிப்பு: தேசிய உத்தி அவசியம் என எச்சரிக்கை

பிரித்தானியாவில் அளவுக்கு அதிகமான பழக்கங்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுடன் பணியாற்றும் சிகிச்சையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், கடந்த ஆண்டில் கட்டுப்பாடற்ற ஆபாசப் படங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கவனித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலை, ஆண்களின் மனநலம், உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை மீது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

பிரித்தானியாவின் ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சை சங்கமான BACP முன்னெடுத்த ஆய்வில் பங்கேற்ற சிகிச்சையாளர்களில் 53 சதவீதம் பேர், ஆபாசப் படங்கள் தொடர்பான பிரச்சினையை சமாளிக்க ஒரு தேசிய அளவிலான உத்தி அவசரமாக தேவை என வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை, இந்த பழக்கத்திலிருந்து தங்களை மீட்க உதவி கோரி சிகிச்சை நாடும் ஆண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற சுமார் 3,000 சிகிச்சையாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் BACP நடத்திய ஆய்வு, ஆபாசப் படங்களுக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை உறுதி செய்துள்ளது. பலர், இதன் விளைவாக தங்களின் குடும்பப் பொறுப்புகள் மற்றும் தொழில்சார் கடமைகளை புறக்கணிப்பதாகவும், நெருங்கிய உறவுகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிலர் உடல் ரீதியான பிரச்சினைகளுடன் கூட சிகிச்சையாளர்களை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என Dr. பவுலா ஹால் கோரிக்கை விடுத்துள்ளார். வயது சரிபார்ப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை கட்டுப்படுத்துவது போன்ற அரசாங்க முயற்சிகளின் போது, ஆபாசப் படப் பயன்பாடு தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த பிரச்சினையை முறையாகக் கையாள ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த தேசிய உத்தி அவசியம் என Dr. ஹால் வலியுறுத்தியுள்ளார். அளவுக்கு அதிகமான ஆபாசப் பயன்பாடு ஒருவரின் கல்வி, தொழில் வாழ்க்கை மற்றும் துணையுடனான நெருக்கம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சிலர் மணிக்கணக்கில் ஆபாசப் படங்களை பார்ப்பதன் காரணமாக, தங்களின் அன்றாடப் பணிகளைச் சரியாக நிறைவேற்ற முடியாமல் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.