ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் பந்து அல்லது அடி பட்டால் என்ன செய்ய வேண்டும்? – முக்கிய எச்சரிக்கைகள்

Published on: 05 Jan 2026, 02:33 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஆண் குழந்தைகள் விளையாடும்போது பாதுகாப்பு கவசம் (Athletic supporter / Cup guard) அணிய வேண்டும். கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில் பந்து வேகமாக ஆணுறுப்பில் பட்டால், விந்துப்பை வீங்கி, சில நேரங்களில் உடலுக்குள் இழுக்கப்பட்டுவிடும்.

ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் பந்து அல்லது அடி பட்டால் என்ன செய்ய வேண்டும்? – முக்கிய எச்சரிக்கைகள்

ஆண் குழந்தைகளின் பாலுறுப்பு ஆரோக்கியம் குறித்து பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ் வலியுறுத்துகிறார். அவர், ஆண் குழந்தையின் எதிர்கால இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

முதலாவதாக, விந்துப்பை (Testes) சரியான இடத்தில் இறங்குவதை உறுதி செய்ய வேண்டும். கருவில் இருக்கும்போது விந்துப்பை வயிற்றுக்குள் உருவாகி, பிறப்பின் போது இறங்கியிருக்க வேண்டும். அப்படி இறங்காமல், வயிற்றிலோ அல்லது இறங்கும் பாதையிலோ தங்கிவிட்டால், விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். இது "கிரிப்டோர்கிடிசம்" (Cryptorchidism) எனப்படும். இதை கவனிக்காமல் விட்டால், எதிர்காலத்தில் அசூஸ்பெர்மியா (விந்தணுக்களே இல்லாத நிலை) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் இது 2% ஆண்களை பாதிக்கிறது. மருத்துவமனையில் பிறப்பின் போது குழந்தை நல மருத்துவர் இதை சரிபார்க்க வேண்டும்.

இரண்டாவதாக, அம்மை (Mumps) நோய் பற்றி விழிப்புணர்வு இருக்க வேண்டும். இந்த கிருமி விந்துப்பையைத் தாக்கி, விந்தணு உற்பத்தி செல்களை அழிக்கக்கூடும். எனவே, MMR தடுப்பூசியை குழந்தைப் பருவத்தில் சரியான நேரத்தில் போட வேண்டும். அம்மை வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்; கை வைத்தியம் அல்லது பாரம்பரிய சிகிச்சைகளை நம்பக்கூடாது.

மூன்றாவதாகவும் மிக முக்கியமானதாகவும், ஆண் குழந்தைகள் விளையாடும்போது பாதுகாப்பு கவசம் (Athletic supporter / Cup guard) அணிய வேண்டும். கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில் பந்து வேகமாக ஆணுறுப்பில் பட்டால், விந்துப்பை வீங்கி, சில நேரங்களில் உடலுக்குள் இழுக்கப்பட்டுவிடும். மேலும், மரத்திலிருந்து குதிக்கும்போதோ, உயரத்திலிருந்து விழும்போதோ விந்துப்பை திருகப்பட்டு (Testicular torsion), ரத்த ஓட்டம் நின்று உறுப்பு உயிரிழந்துவிடும் அபாயம் உண்டு. இந்த நிலை ஒரு அவசர மருத்துவ நிகழ்வு. 3–4 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே விந்தணு உற்பத்தித் திறனை பாதுகாக்க முடியும். தாமதமானால், அந்த உறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

டாக்டர் காமராஜ் முடிவாக, “மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கவும் வழி உண்டு; ஏற்பட்டாலும் சிகிச்சை உண்டு. ஆனால், பெற்றோர்கள் இது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW