100 கிராம் கருவாடு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? உண்மைகள் என்ன?
கருவாட்டில் ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, செலினியம், அயோடின் போன்ற நுண் சத்துக்களும் உள்ளன. கருவாட்டின் முட்கள் மெல்லியதாக இருப்பதால், அவற்றை உடன் சாப்பிடும் போது கால்சியம் கிடைக்கிறது.
அசைவ உணவுகளை விரும்புபவர்களின் பட்டியலில் கருவாடு முக்கிய இடம் பிடித்துள்ளது. விலைக்குறைவு, நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும் என்பதுடன், சுவையும் சத்தும் நிறைந்த உணவாக கருவாடு தமிழ்நாட்டில், குறிப்பாக கடலோர பகுதிகளில் வாழ்பவர்களின் தினசரி உணவில் தவறாமல் இடம் பெறுகிறது. பழைய சோற்றுடன் கருவாடு தொக்கு சேர்த்துச் சாப்பிடும் போது கிடைக்கும் சுவையை பலரும் மறக்க முடியாது.
மீனை கல் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, வெயிலில் நன்கு காயவைத்து அதன் நீர்ச்சத்து 20 சதவீதத்திற்கும் கீழ் குறையும் போது கிடைப்பதே கருவாடு. இப்படியாக தயாரிக்கப்படும் கருவாட்டை நீண்ட காலம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம். கருவாட்டில் உப்பு அதிகம் இருப்பதால் சிலர் தயக்கம் காட்டினாலும், அளவோடு எடுத்துக் கொண்டால் அது ஆபத்தானது அல்ல என்பதே உண்மை.
குழந்தை நல மருத்துவர்கள் மற்றும் உணவு ஆலோசகர்கள், கருவாட்டில் உள்ள சத்துக்கள் குறித்து விளக்குகையில், நற்பதமான 100 கிராம் மீனில் 100 முதல் 120 கலோரிகள் இருக்கும் நிலையில், அதே அளவு கருவாட்டில் 200 முதல் 250 கலோரிகள் வரை கிடைக்கின்றன என்கின்றனர். மேலும் நற்பதமான மீனில் 20 முதல் 22 கிராம் புரோட்டீன் இருந்தால், கருவாட்டில் 55 முதல் 70 கிராம் வரை புரோட்டீன் உள்ளது. அதனால் தினமும் 100 கிராம் கருவாடு சாப்பிட்டாலே ஒரு நாளுக்குத் தேவையான புரோட்டீன் உடலுக்கு எளிதாக கிடைத்துவிடும்.
இதனுடன், கருவாட்டில் ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, செலினியம், அயோடின் போன்ற நுண் சத்துக்களும் உள்ளன. கருவாட்டின் முட்கள் மெல்லியதாக இருப்பதால், அவற்றை உடன் சாப்பிடும் போது கால்சியம் கிடைக்கிறது. இந்த கால்சியம், பால் மூலம் கிடைப்பதை விட கூடுதல் அளவில் உடலுக்கு பயன் தருகிறது. எனவே, நல்ல புரோட்டீன் மூலத்தை தேடும் அசைவ விரும்பிகளுக்கு கருவாடு சிறந்த தேர்வாக விளங்குகிறது.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் கருவாட்டை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, ஸ்ரீலங்காவில் குழந்தைகளுக்கான உணவு பரிந்துரை அட்டவணையில், 6 மாத குழந்தைகளுக்கு இணை உணவு தொடங்கும் போது நெத்திலி கருவாட்டை அரைத்து பொடியாக செய்து, இரண்டு ஸ்பூன் இணை உணவுடன் சேர்த்து கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தேவையான 10 கிராம் புரோட்டீன் எளிதில் கிடைக்கிறது.
அதே நேரத்தில் கருவாட்டின் ஒரே குறை அதில் உள்ளமை அதிக உப்பு தான். 100 கிராம் கருவாடு சாப்பிட்டாலே 5 முதல் 7 கிராம் வரை உப்பு உடலுக்குள் செல்லும். இரண்டு முறை நீரில் கழுவினாலும் உப்பு முழுமையாக குறையாது. சாதாரண மக்களுக்கும், குழந்தைகளுக்கும் இது பெரிய பிரச்சனையல்ல. ஆனால் இதய நோய், சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கருவாட்டை தவிர்த்து, நற்பதமான மீனை தேர்வு செய்வது நல்லது.
மொத்தத்தில், உங்களுக்கு கருவாடு பிடித்திருந்தால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. தினசரி உணவில் சிறிதளவு சேர்த்துக் கொண்டால், உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைத்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.
Editorial Staff