அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் மீட்கப்பட்ட இலங்கைப் பெண் மற்றும் கணவன் சடலம்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் தங்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் சமிந்திகா ஜெயவர்தன இலங்கை பூர்வீகம் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டிலிருந்து சுமார் 30 விநாடி இடைவெளியில் இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் அந்த சத்தம் நரியை சுடும் போது ஏற்படும் சத்தமாக இருக்கலாம் என அவர்கள் நினைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இது ஒரு கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தகவல்களின் படி, சமிந்திகா சமீபத்தில் தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரிவால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக ஆரோன் ஹம்மண்ட் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர் தானும் உயிரை மாய்த்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
மேலும், ஆரோன் ஹம்மண்ட் முன்பு பலமுறை வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என புகார்கள் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்த வீட்டில் வசித்து வந்த இந்த தம்பதியரை அயலவர்கள் அன்பான ஜோடியாகவே கருதியிருந்தனர். எனினும், சமிந்திகா சில காலமாக கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரோனின் குடும்பத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்ததோடு, தங்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு விக்டோரியா அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் நடந்த வீடு Haunted Hills என அழைக்கப்படும் மர்மக் கதைகளால் பரவலாக அறியப்படும் பகுதியின் அருகில் அமைந்துள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்களிடையே கூடுதல் அச்சம் நிலவுகிறது.