தொடர் வார இறுதி விடுமுறை: நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
தொடர் வார இறுதி விடுமுறை: நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

சுப முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அனுபவித்த சம்பவங்கள் சமீபத்தில் பதிவாகின. குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் போதாமை காரணமாக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது. இதனை கருத்தில் கொண்டு வார இறுதி, தொடர் விடுமுறை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து Tamil Nadu State Transport Corporation வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நேற்று 190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 310 பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று 55 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இன்று மற்றும் நாளை தலா 55 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரம் பகுதியில் இருந்தும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இன்று 10,728 பயணிகள், நாளை 4,598 பயணிகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 11,065 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யுமாறு போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர