கணவன் - மனைவி இடையே 'இயற்கைக்கு மாறான உறவு' குற்றமாகாது: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் தன்னை வற்புறுத்தி இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொள்வதாகப் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 2023-ம் ஆண்டு கணவர் மீது ஐபிசி 377 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி மிலிந்த் ரமேஷ் பட்கே, சட்ட ரீதியான ஒரு முக்கிய விளக்கத்தை அளித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 மற்றும் 377 ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, திருமண உறவுக்குள் கணவன்-மனைவி இடையே நிகழும் (வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு) இத்தகைய பாலியல் செயல்களை இயற்கைக்கு மாறான குற்றமாகக் கருத முடியாது எனத் தெரிவித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-ன் கீழ் உள்ள இரண்டாவது விதிவிலக்கை விரிவாகக் குறிப்பிட்டார். அதன் படி, வயது வந்த மனைவி மற்றும் கணவனுக்கு இடையே நடக்கும் உடலுறவு அல்லது பாலியல் செயல்கள் 'கற்பழிப்பு' (Rape) என்ற வரையறைக்குள் வராது.
ஒரு செயல் கற்பழிப்பு என்ற சட்டப்பிரிவுக்குள் வராதபோது, அதே செயலை மீண்டும் 377-வது பிரிவின் கீழ் கொண்டு வந்து 'இயற்கைக்கு மாறான குற்றம்' என வழக்குத் தொடர முடியாது என்று நீதிபதி தெளிவுபடுத்தினார். இதன் மூலம், திருமண பந்தத்திற்குள் நடக்கும் இத்தகைய செயல்கள், அவை எத்தகைய தன்மையைக் கொண்டிருந்தாலும், 377-வது பிரிவின் கீழ் தண்டனைக்குரியது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் மனுதாரரான கணவர் மீது சுமத்தப்பட்டிருந்த பிரிவு 377-ன் கீழான குற்றச்சாட்டுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் உள்ள வரதட்சணைக் கொடுமை (498-A), தாக்குதல் (354) மற்றும் பிற கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அந்தப் புகார்களில் உள்ள மருத்துவ ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை முழுமையான விசாரணைக்குப் பிறகே உறுதி செய்ய முடியும் என்பதால், மற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார். திருமண உறவுக்குள் நிலவும் சட்ட நுணுக்கங்கள் குறித்த இந்தத் தீர்ப்பு தற்போது சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.