இளம் சட்டத்தரணிகளால் 'விரைவாக' விசாரிக்கப்படும் உயர்மட்ட குற்றவியல் வழக்கு நீதி வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது?

இதன் மூலம் ஓர் உயர்மட்ட வழக்கு விசாரணையை ஆய்வு செய்வதற்கு இளம் சட்டத்தரணிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குவது சங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இளம் சட்டத்தரணிகளால் 'விரைவாக' விசாரிக்கப்படும் உயர்மட்ட குற்றவியல் வழக்கு நீதி வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கை துரிதமாக விசாரித்து முடிப்பதற்காக வாரத்தின் ஐந்து நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக அதிலிருந்து விலகத் தீர்மானித்த இலங்கையின் பிரபலமான மூன்று மூத்த சட்டத்தரணிகளுக்கு பதிலாக சந்தேகநபர்கள் சார்பில் வாதிடுவதற்கு அனுபவம் குறைந்த இளம் சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியால் நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கிலிருந்து விலகிய மூத்த சட்டத்தரணிகளுக்கு பதிலாக சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாவதற்கு நீதிபதிகள் குழாமின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், ஒப்பீட்டளவில் குறைந்த அனுபவமுள்ள இளைய சட்டத்தரணிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இதன் மூலம் ஓர் உயர்மட்ட வழக்கு விசாரணையை ஆய்வு செய்வதற்கு இளம் சட்டத்தரணிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குவது சங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு தற்போது புல்லர்ஸ் வீதியிலுள்ள நிலையான மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகிறது. தனிப்பட்ட சட்டத்தரணிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத பிரதிவாதிகளுக்காக முன்னிலையாவதற்கு ஆறு  ளம் சட்டத்தரணிகளின் உதவி நீதிமன்றத்துக்குத் தேவைப்படுவதாக நீதிபதிகள் குழாம் எனக்கு அறிவித்துள்ளது” என கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரினால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

269 பேரை பலி கொண்ட 2019 உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 24 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமானது. அதற்கு முந்தைய வாரம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க மதகுருமார் மற்றும் சட்டத்தரணிகள் குழுவொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்ததாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்திருந்தது.

“அதேபோல், இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்றினை நியமிப்பதற்கும் ஜனாதிபதி முன்வந்தார். அக்குழுவுக்கும் கர்தினால் ஆண்டகை தலைமையிலான குழுவுக்கும் இடையில் நடைபெற்ற தொடர்ச்சியான சந்திப்புகள் மூலம் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நீதியைத் தேடும் பயணத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கித் தருவதாக ஜனாதிபதி அந்தச் சந்தர்ப்பத்தில் உறுதியளித்தார்” என பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சமூக மற்றும் சமய நிலையத்தைச் சேர்ந்த அருட்தந்தை ரொஹான் சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

10 தொகுதிகளில் 10,000 பக்கங்களைக் கொண்ட 23,000 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை நாளாந்தம் முன்னெடுக்கும் கால அட்டவணையின்படி தம்மால் தொடர்ந்தும் இதில் பங்கேற்க இயலாது என சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணிகளான கே.எஸ். ரத்னவேல், கஸ்ஸாலி ஹுசைன் மற்றும் ருஷ்டி ஹபீப் ஆகிய மூவரும் ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.

நீதிமன்றம் சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளதா?

“இந்த வழக்கை வாரத்தின் ஐந்து நாட்களும் முழு நேரமும் விசாரணை செய்வதை நிறுத்தி குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு குறைத்து விசாரணை செய்யுமாறு தான் நாம் கோரியிருந்தோம். ஏனெனில் எம்மால் வாரத்தின் ஐந்து நாட்களும் முழு நேரத்தையும் இந்த வழக்குக்காக ஒதுக்க முடியாது” என மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் எம்மிடம் தெரிவித்தார்.

தமக்கு மாத்திரமன்றி, வேலைப்பளு மிகுந்த வேறு எந்த சட்டத்தரணிக்கும் இந்த வழக்கு அழைக்கப்படும் திகதிகள் மற்றும் கால அட்டவணையின்படி நீதிமன்றத்துக்குச் செல்வது கடினமாகவே இருக்கும் என சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மற்றொரு மூத்த சட்டத்தரணியான கஸ்ஸாலி ஹுசைன் தெரிவித்தார்.

“எங்கள் எல்லோருக்குமே இந்த முறையில் வழக்குகளுக்கு முன்னிலையாவது சிரமமான விடயம். ஏனென்றால் எங்களுக்கு வேறு நீதிமன்றங்களிலும் வழக்குகள் இருக்கின்றன. ஒரே ஒரு வழக்குக்காக ஐந்து நாட்களும் காலையிலிருந்து மாலை வரை இருக்க முடியாது. அப்படி இருந்தால் நாம் பொறுப்பேற்ற ஏனைய வழக்குகளுக்கு என்ன நடக்கும்? எனவே தான் எனக்கும் இந்த வழக்கில்ருந்து விலக நேர்ந்தது," என சட்டத்தரணி ஹுசைன் கூறினார்.

24 சந்தேகநபர்களுக்காக தனித்தனியாக உள்ள கோப்புகளில் காணப்படும் அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கைகளை ஆய்வு செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் என்பதால் அதற்காக நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி ரத்னவேல் சுட்டிக்காட்டினார்.

“இந்த அறிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் உள்ளன. பத்து தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சந்தேகநபர் சம்பந்தமாகவும் பொலிஸ் அறிக்கைகள், வைத்திய அறிக்கைகள், பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு இணைப்புகள் உள்ளன. அவற்றை நன்கு பரிசீலித்துப் பார்த்த பிறகே எங்களால் வழக்குக்கு தயாராக முடியும். அதற்கு அதிக காலம் எடுக்கும். தவிரவும், தினமும் நாள் முழுவதும் வழக்கு விசாரணை நடக்கும்போது அது மிகுந்த களைப்பை ஏற்படுத்துகிறது.” எனக் கூறிய மூத்த சட்டத்தரணி ரத்னவேல், அந்த பரிசீலனையில் ஏதேனும்  குறைபாடுகள் ஏற்பட்டால் ஒட்டுமொத்த வழக்கு விசாரணையே பாதிக்கப்படலாம் என மேலும் தெரிவித்தார்.

தற்போது நிலவும் சிரமங்கள் குறித்தும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைக்கும் கருத்து தொடர்பிலும் நீதிபதிகள் உடன்படாததால் அந்த சட்டத்தரணிகள் வழக்கிலிருந்து விலகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு சட்ட உதவி கிடைக்காமல் போவதைத் தவிர்ப்பதற்கு இரண்டு நாட்களுக்குள் தனிப்பட்ட சட்டத்தரணிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறு இல்லையெனில் அரசாங்க சட்டத்தரணிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

“தமக்கு தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளைத் தேடிக்கொள்வதில் சிரமமில்லை என சந்தேகநபர்கள் கூறுகிறார்கள். ஆனால் யார் அந்த வழக்கை பொறுப்பேற்றாலும் அவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களும் காலையிலிருந்து மாலை வரை இருக்க முடியுமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.”

சிரேஷ்ட சட்டத்தரணிகள் மாத்திரமல்ல, இளம் சட்டத்தரணிகளாக இருந்தாலும் அதுதான் உண்மை நிலைமை” என சட்டத்தரணி ரத்னவேல் மேலும் விளக்கினார்.

நீதியான வழக்கு விசாரணைக்கு இடையூறு

நீதிபதிகளின் அந்த அறிவித்தலைத் தொடர்ந்தே கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் வழக்குக்காக இளம்  சட்டத்தரணிகளை நியமிப்பது பற்றிய பகிரங்க அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர்களின் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கும் வகையில் விடயங்களை முன்வைக்கக் கூடியவர்களை அழைப்பதற்குப் பதிலாக, பெயரளவில் சட்டப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம் நியாயமான மற்றும் நீதியான வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் இளம் சட்டத்தரணிகளை இந்த வழக்குக்காக முன்வருமாறு விசேடமாக அழைத்திருப்பது, அவர்களின் சட்ட அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவே ஆகும்.

“மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணை செய்யப்படும் பிரதான குற்றவியல் வழக்கொன்றில் நேரடியாகப் பங்குபற்றுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இதன் மூலம் கிட்டியிருக்கிறது,” என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு “சம்பந்தமில்லை”

விசேட குற்றவியல் வழக்கொன்றில் நேரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாக அதில் பணியாற்றிய மூத்த சட்டத்தரணிகள் அனைவரும் விலகிய பின்னர், அவ்வழக்குக்கு இளம் சட்டத்தரணிகளை அழைத்தது ஏன் என வினவப்பட்டபோது, ‘புதிதாக நியமிக்கப்பட்ட சட்டத்தரணிகளுக்கு ஒரு கற்கை சார்ந்த வாய்ப்பை வழங்குவதற்காக’ அவ்வாறு செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். “எங்களுக்குத் தேவைப்பட்டது இளம் சட்டத்தரணிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாகும். அவர்களுக்கு இது கற்றுக்கொள்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்” என கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி இனோகா பெரேரா கூறினார்.

ஆனால், வழக்கில் சந்தேகநபர்களுக்காக சட்டத்தரணிகளை நியமிப்பதன் நோக்கம் நியாயமான மற்றும் நீதியான விசாரணையை முன்னெடுப்பது அல்லவா எனக் வினவியபோது, அது தனது பணியோ அல்லது பிரச்சினையோ அல்ல என அவர் தெரிவித்தார். “எனக்குத் தேவைப்பட்டது நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக ஆட்களைத் தேடிக்கொடுப்பது மாத்திரமே. அதற்கு அப்பால் எதுவும் எனக்குச் சம்பந்தம் இல்லை” என சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உறுதியாகக் கூறினார்.

இருந்தபோதிலும் குறிப்பாக இளம் சட்டத்தரணிகளை மட்டும் அழைத்து அவர்களுக்கு இந்த வழக்கின் மூலம் கற்றுக்கொள்ளவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு கிடைப்பதாகக் கூறுவது, வழக்குக்கு உதவுவதை விடவும் சந்தேகநபர்களுக்கு நியாயமான விசாரணையை எதிர்கொள்ளும் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதாக அமையாதா என வினவியபோது, சந்தேகநபர்கள் எதிர்கொள்ளும் நிலைமை தமக்கு எவ்வகையிலும் சம்பந்தமில்லாத ஒன்று என அவர் கடுமையான தொனியில் தெரிவித்தார்.

“அது எனது தேவையல்ல என்று நான் தெளிவாகக் கூறிவிட்டேன். எனக்கு உயிர்த்த ஞாயிறு வழக்கு பற்றித் தெரியாது. தற்போதுள்ள நிலைமையின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இளம் சட்டத்தரணிகளை ஒருங்கிணைப்பு செய்ய முயன்றேன். அத்துடன் அது எமது சங்கம் எடுத்த பொதுவான முடிவு” என சட்டத்தரணி இனோகா பெரேரா கூறினார்.

கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி சந்தேகநபர்களுக்காக ஆறு இளம்  சட்டத்தரணிகளின் உதவி வழக்கின் நீதிபதிகள் குழாமினாலேயே கோரப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தரணி இனோகா பெரேரா அதனை மறுத்துரைத்தார்.

“பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாவதற்காக ஆறு இளம் சட்டத்தரணிகளின் உதவி நீதிமன்றத்துக்குத் தேவைப்படுவதாக கௌரவ நீதிபதிகள் குழாம் எனக்கு அறிவித்துள்ளது” என அவரே பகிரங்கமாக அறிவித்திருந்த போதிலும், “இல்லை, நீதிபதிகள் கோரவில்லை. அதனை நாங்களே தீர்மானித்தோம்” என அவர் வலியுறுத்திக் கூறினார்.

இயற்கையான நீதிக் கோட்பாடுகளை மீறுதல்

மிகவும் விசேடமான குற்றவியல் வழக்கொன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த நாட்டின் மூத்த சட்டத்தரணிகள் மூவர் அதிலிருந்து விலகிய பின்னர், அதற்காக இளம் சட்டத்தரணிகளையே நியமிக்க எடுக்கும் முயற்சி குறித்து வினவியபோது  தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட இலங்கையின் பிரபல குற்றவியல் சட்டத்தரணி ஒருவர் இது இயற்கையான நீதி கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணான செயல் எனத் தெரிவித்தார்.

“இளம் சட்டத்தரணிகள் அனுபவம் பெற வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இது அவ்வாறு செய்ய வேண்டிய வழக்கு அல்ல. அந்தச் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை. அதேபோல் அந்த வழக்கு மற்றும் அதன் விசாரணை நடவடிக்கைகள் மிகவும் கேள்விக்குரியவை. அப்படியிருக்கும்போது அவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான கடைசி வாய்ப்பு என்பது நியாயமான விசாரணை பெறுவதாகும். அந்த நிலைமை இதன் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இவ்வாறான வழக்கொன்றில் இளம் சட்டத்தரணிகளை வைத்துக் கொண்டு விளையாடுவதற்கு இது ஒன்றும் விளையாட்டு மைதானமல்ல. இன்னொரு விடயம், அவர்கள் இதனை ஆய்வு செய்வதற்கு இளம் சட்டத்தரணிகளை அழைப்பதாகச் சொல்கிறார்கள் அல்லவா? அப்படியானால் அந்தச் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகப்போவது யார்? இது மிகவும் அநாகரிகமான மற்றும் ஆபத்தான விடயம்” எனக் கூறிய அந்த சட்டத்தரணி, இளம் வைத்தியர்களுக்கு அனுபவம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் இன்றி நோயாளிகளுக்குப் பாரிய சத்திர சிகிச்சைகளைச் செய்ய அனுமதிக்கும் முறை உலகில் எங்காவது நடைமுறையில் உண்டா எனத் திரும்ப வினவினார்.

‘மரதன் ஓட்டம்’

நடைமுறையிலுள்ள நீதித்துறை மரபுகளைத் தாண்டி ஏதோவொரு தலையீட்டின் பேரில் வழக்கை அதிவேகமாக முன்னெடுத்துச் செல்வதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெறும் வழக்கிலிருந்து சட்டத்தரணிகள் விலகுவதற்குக் காரணமாக அமைந்தது என பெண்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார். இது சட்டத்தின் நியாயமான உரிமைகளைத் தகுதியற்ற முறையில் பறிக்கக்கூடிய எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாத ஒரு செயன்முறை என அவர் கூறுகிறார்.

“இந்த வழக்கு ஒரு மரதன் ஓட்டப்போட்டி போன்றது. ஆச்சரியமூட்டக்கூடிய ஒரு அவசரத்தில் இதை முடிக்கப் பார்க்கிறார்கள். ஏன் இது? வழக்குகளை நடத்தி முடிப்பது இப்படியா?” என பெண்கள் செயற்பாட்டாளர் வலையமைப்பின் (WAN) தலைவி ஷ்ரீன் அப்துல் சரூர் காட்டமாக வினவுகிறார்.

அதேபோல் இவ்வாறு அவசர அவசரமாக வழக்கை நடத்தி முடித்து யாரையாவது குற்றவாளிகளாக்கிய உடனே நீதி மற்றும் நியாயம் கிடைத்துவிடுமா எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

“இது ஒரு வியப்பூட்டும் நிலைமை. இந்தச் சந்தேகநபர்களுக்குத் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான விசாரணையைப் பெற உரிமை இல்லையா? யாருக்கு இந்த வழக்கை அவசரமாக முடிக்க வேண்டிய தேவை உள்ளது: சட்டமா அதிபருக்கா? பிரதம நீதியரசருக்கா? நாட்டின் நிறைவேற்று அதிகாரத்திற்கா? அல்லது கர்தினால் ஆண்டகைக்கா? இது ஒரு விளையாட்டல்ல, இந்தச் சந்தேகநபர்களும் மனிதர்களே. தமக்கு விருப்பமான மற்றும் பொருத்தமான சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ள அந்த மனிதர்களுக்கு உரிமை உண்டு.”

2019 இல் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வகைக்கூற வேண்டிய மற்றும் அதனைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் பலருக்கு எதிராக ஏற்கனவே பல குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கேள்விக்குள்ளாகியுள்ள இந்த வழக்கு, 2021 ஆம் ஆண்டில் அப்போதைய சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் பிரதம நீதியரசரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மூவர் அடங்கிய விசேட வழக்காக பெயரிடப்பட்டது. மேல் நீதிமன்ற நீதியரசர் தமித் தொட்டவத்தை தலைமையில் அமைந்த அந்த நீதிபதிகள் குழாமில் அன்று ஏனைய உறுப்பினர்களாக அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் இருந்தனர். பின்னர் அதன் தலைவராக நவரத்ன மாரசிங்க நியமிக்கப்பட்டு ஏனைய உறுப்பினர்களாக சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

முதலாவது நீதிபதிகள் குழாம் காலத்திலும் மொழிப்பிரச்சினை கடுமையாக எழுந்த நிலையில், பல சந்தர்ப்பங்களில் தமிழ் பேசும் சட்டத்தரணிகளை வழக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் குழாம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவித்திருந்தது.

வீதித்தடைகளால் மறிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் முக்கியமான நிறுவனங்கள் மற்றும் தூதரகங்கள் நிறைந்த கொழும்பு 7, புல்லர்ஸ் வீதியின் எல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்த தங்கியிருந்த இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விசேட வழக்கு நடவடிக்கை அந்தத் தடைகள் காரணமாகவே வெளிச் சமூகத்திலிருந்து மறைந்திருப்பதாகவும், குறைந்தது ஒரு சட்டத்தரணி ஓய்வெடுப்பதற்குக் கூட அங்கு இடமில்லை எனவும் கூறிய ஷ்ரீன் சரூர் இறுதியாக சட்ட மரபுகளையும் நீதிக் கோட்பாடுகளையும் மீறி அவசர அவசரமாக இவவ்ழக்கை விசாரிப்பதன் மூலம் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

கே. விஜேசிங்க

சமூக வலைத்தளங்களில் பின்தொடர