கனடா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க சுங்கவரிக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள சுங்கவரி நடவடிக்கையை ரத்து செய்யும் நோக்கில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முக்கிய வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகளை திரும்பப் பெறும் வகையில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அமெரிக்கா–கனடா எல்லைப் பகுதியில் “பென்டனில் அவசரநிலை” நிலவுகிறது என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, சர்வதேச பொருளாதார அவசர அதிகாரச் சட்டம் (IEEPA) கீழ் கனடாவுக்கு டிரம்ப் 35 சதவீத சுங்கவரி விதித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் ஆறு குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து ஆதரவு வழங்கினர்.
இந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், அதிபரின் மறுப்பை மீற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தீர்மானம் அடுத்த கட்டமாக செனட் சபைக்கு அனுப்பப்பட உள்ளது. இரு சபைகளும் அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே சுங்கவரி ரத்து செய்யும் நடவடிக்கை இறுதி நிலைக்கு செல்லும்.
இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிரெகரி மீக்ஸ், கனடா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி என்றும் அது அச்சுறுத்தலாக கருதப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அரசின் தரவுகளின்படி வட எல்லைப் பகுதியில் கைப்பற்றப்படும் பென்டனில் அளவு, மெக்சிகோ எல்லையை ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மறுபுறம், சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் போதைப்பொருள் பிரச்சினை தீவிரமானது என்றும், அதனை கட்டுப்படுத்த கனடா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வாதிட்டுள்ளனர். இதேவேளை, உருக்கு, அலுமினியம், வாகனங்கள் மற்றும் மரவளம் உள்ளிட்ட துறைகளில் விதிக்கப்பட்ட தனித்தனி சுங்க வரிகளால் கனடா ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
IEEPA சட்டத்தை பயன்படுத்தி சுங்கவரி விதிக்கும் அதிகாரம் குறித்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
