மேடையில் கழன்று விழுந்த பல்.. அடுத்து நடந்த சம்பவம்... தாய்லாந்து அழகிக்குக் குவியும் பாராட்டு!

Published on: 28 Mar 2026, 07:57 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தாய்லாந்து அழகிப் போட்டியில் அறிமுக உரையின் போது செயற்கைப் பற்கள் கழன்று விழுந்தும், சற்றும் பதற்றமடையாமல் சூழலைக் கையாண்ட கமோல்வான் சனகோவின் தன்னம்பிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேடையில் கழன்று விழுந்த பல்.. அடுத்து நடந்த சம்பவம்... தாய்லாந்து அழகிக்குக் குவியும் பாராட்டு!

தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026' (Miss Grand Thailand 2026) அழகிப் போட்டியில், போட்டியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தும் சுற்றில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. 

போட்டியாளர் கமோல்வான் சனகோ (Kamolwan Thanakol) மேடைக்கு வந்து உற்சாகமாகத் தனது அறிமுக உரையைத் தொடங்கியபோது, எதிர்பாராதவிதமாக அவரது முன்வரிசை செயற்கைப் பற்கள் கழன்று கீழே விழுந்தன.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் முன்னிலையில் நேரலையில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தது. பொதுவாக இதுபோன்ற இக்கட்டான சூழலில் எவரும் பதற்றமடைந்து மேடையை விட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், கமோல்வான் சனகோ சற்றும் கலங்கவில்லை.

சில வினாடிகள் மட்டும் பின்னால் திரும்பி, கீழே விழுந்த பற்களை லாவகமாக எடுத்துச் சரிசெய்து கொண்டு, மீண்டும் மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினார். அவரது முகத்தில் எந்தவிதமான தயக்கமோ அல்லது அவமானமோ தெரியவில்லை; மாறாக ஒரு புன்னகையுடனும் பெரும் கம்பீரத்துடனும் தனது உரையைத் தொடர்ந்தார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. "அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை, இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் மனதிடத்தில்தான் உள்ளது" எனப் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

"ஒரு மிகப்பெரிய மேடையில் தன்னம்பிக்கையை இழக்காமல் நின்ற கமோல்வான் சனகோ தான் உண்மையான அழகி" என ரசிகர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அவருக்குத் தார்மீக ரீதியாகப் பெரும் ஆதரவைத் தேடித்தந்துள்ளதுடன், தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் மாறியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW