இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? தொடர்ந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம்!
சமீப ஆண்டுகளில் உலகம் முழுவதும் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய நோய் திடீரென உருவாகும் பிரச்சனை அல்ல; பல ஆண்டுகளாக நம்மால் கடைப்பிடிக்கப்படும் தவறான வாழ்க்கை முறைகளின் விளைவாக இது உருவாகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடலுழைப்பு குறைந்த வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் சில தீய பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தை மெதுவாக பாதிக்கின்றன.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து அமர்ந்திருப்பதால் இரத்த ஓட்டம் குறைவதுடன், உடலில் கெட்ட கொழுப்பு தேங்கும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் உயர்ந்து, இதய நோய்கள் உருவாக வாய்ப்பு அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க இடையிடையே எழுந்து சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வதும், தினசரி உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதும் அவசியமாகும்.
போதுமான மற்றும் தரமான தூக்கம் இல்லாததும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணமாகும். தேவையான அளவு தூக்கம் கிடைக்காமல் இருந்தால் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் உடலின் அழற்சி நிலை அதிகரிக்கக்கூடும். இது நீண்ட காலத்தில் இதய நோய் அபாயத்தை உயர்த்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலில் தோன்றும் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிப்பதும் ஆபத்தானது. உடல் சோர்வு, மூச்சுத்திணறல், நெஞ்சுவலி அல்லது இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்பானங்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள் போன்றவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, இதய நோய் அபாயத்தை உயர்த்துகின்றன. இயற்கை உணவுகள் மற்றும் சத்தான உணவுகளை தேர்வு செய்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும், தொடர்ந்து மன அழுத்தத்தில் வாழ்வதும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது உடலில் கார்டிசோல் ஹார்மோன் சுரந்து இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. நீண்ட காலமாக மன அழுத்தம் நீடித்தால், இதயமும் இரத்த நாளங்களும் கூடுதல் அழுத்தத்தை சந்தித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே மனநலத்தை பாதுகாக்கும் பழக்கங்களை கடைப்பிடிப்பதும் அவசியம்.
