இந்தியா vs பாகிஸ்தான்: சூப்பர் 4 போட்டியில் திலக் வர்மாவின் அதிரடி சிக்ஸரால் இந்தியாவுக்கு அபார வெற்றி!

2025 ஆசியக் கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் வெற்றி பெற்றது.

இந்தியா vs பாகிஸ்தான்: சூப்பர் 4 போட்டியில் திலக் வர்மாவின் அதிரடி சிக்ஸரால் இந்தியாவுக்கு அபார வெற்றி!

2025 ஆசியக் கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பர்ஹான் 58 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சில், சிவம் துபே 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அபிஷேக் சர்மா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒரு பெரிய சிக்ஸரை அடித்தார். ஷாஹீன் அப்ரிடி வீசிய பவுன்சரை இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா பின் பக்கம் திருப்பி பவுண்டரிக்கு அனுப்பினார்.

சுப்மன் கில்லும் பவுண்டரிகளை விரட்ட, இந்திய அணி வெறும் 4 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்து வலுவான துவக்கத்தை அளித்தது. அபிஷேக் சர்மா வெறும் 24 பந்துகளில் அரைசதம் கடக்க, இந்திய அணி 8.4 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது.

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், பஹீம் அஷ்ரஃப் வீசிய 10வது ஓவரில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன், அப்ரார் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தபோது, இந்திய அணி வெற்றிபெற 20 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரியை விரட்டி ரசிகர்களின் பதட்டத்தைக் குறைத்தார். களத்தில் நிலைத்திருந்த திலக் வர்மா ஒரு சிக்ஸரைத் தூக்கினார், இதனால் அந்த ஓவரில் மொத்தமாக 10 ரன்கள் கிடைத்தது. கடைசி 9 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், திலக் வர்மா மீண்டும் ஒரு சிக்ஸரைத் தூக்கினார்.

வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழலில், திலக் வர்மா பவுண்டரி அடித்து 18.5 ஓவர்களில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.