உலகின் பெட்ரோல் சாம்ராஜ்ஜியம் டிரம்ப் கையில்! வெனிசுலா எண்ணெய் மீது இரவோடு இரவு கையெழுத்து – சீனா, ரஷ்யா திகைப்பு

உலக அரசியல் மற்றும் எரிசக்தி சந்தையை உலுக்கிய வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவின் எண்ணெய் வருவாயை முழுமையாக அமெரிக்கா கட்டுப்படுத்தும் வகையில் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.


உலகின் பெட்ரோல் சாம்ராஜ்ஜியம் டிரம்ப் கையில்! வெனிசுலா எண்ணெய் மீது இரவோடு இரவு கையெழுத்து – சீனா, ரஷ்யா திகைப்பு

உலக அரசியல் மற்றும் எரிசக்தி சந்தையை உலுக்கிய வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவின் எண்ணெய் வருவாயை முழுமையாக அமெரிக்கா கட்டுப்படுத்தும் வகையில் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம், வெனிசுலாவின் எண்ணெய் வருவாய் அமெரிக்கக் கருவூல கணக்குகளில் பாதுகாக்கப்படுவதுடன், கடனாளர்கள் அல்லது சட்டரீதியான கோரிக்கைகள் மூலம் அந்த நிதியை கைப்பற்ற முடியாத வகையிலும் தடையிடப்பட்டுள்ளது. இதனுடன் தேசிய அவசரநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பின்படி, இந்த நிர்வாக ஆணை வெனிசுலாவின் எண்ணெய் வருவாயை மூன்றாம் தரப்பினர் கைப்பற்றுவதைத் தடுக்கிறது. கடன் வசூல், நீதிமன்ற தீர்ப்புகள் போன்ற காரணங்களுக்காக அந்த நிதியை பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய நலன்களை மேம்படுத்தும் நோக்கில், இந்த வருவாய் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆணையின் படி, வெனிசுலாவின் எண்ணெய் வருவாய் அந்நாட்டில் “அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மை” உருவாக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அமெரிக்கா அங்கீகரிக்கும் பரிமாற்றங்களைத் தவிர, வேறு எந்த நோக்கத்திற்கும் அந்த நிதியை பயன்படுத்த அனுமதி இல்லை. அதாவது, வெனிசுலா எண்ணெய் வருவாயின் கட்டுப்பாட்டில் அமெரிக்கா முழு அதிகாரம் பெற்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் வரை, அங்கு ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாட்டின் கட்டுப்பாடு அமெரிக்காவின் கைக்குச் சென்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

உலகில் அதிக கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடு என்றால் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளையே நினைப்போம். ஆனால் உண்மையில், உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடு வெனிசுலா தான். அந்த இருப்பு சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் என கணிக்கப்படுகிறது. கிழக்கு வெனிசுலாவில் அமைந்துள்ள ஓரினோகோ பெட்ரோலியம் பெல்ட் இந்த வளத்தின் முக்கிய ஆதாரமாகும்.

இந்த அளவுக்கு பெரும் எண்ணெய் இருப்பு இருந்தும், வெனிசுலா தற்போது உலக எண்ணெய் வர்த்தகத்தில் வெறும் 0.35 சதவிகிதம் மட்டுமே பங்களிக்கிறது. காரணம், அந்நாட்டின் கச்சா எண்ணெய் மிகவும் கனமானது, அதிக பிசுபிசுப்பும் சல்பர் உள்ளடக்கமும் கொண்டது. இதை சுத்திகரிப்பதற்கும், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் கூடுதல் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக செலவுகள் தேவைப்படுகிறது. நீராவி உட்செலுத்துதல், இலகுரக எண்ணெயுடன் கலத்தல் போன்ற முறைகள் அவசியமாக இருப்பதால் உற்பத்திச்செலவு அதிகரிக்கிறது.

ஒருகாலத்தில் தினமும் பல மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்த வெனிசுலா, தற்போது 1.0 முதல் 1.2 மில்லியன் பீப்பாய் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலீட்டு பற்றாக்குறை, நிர்வாக கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் சர்வதேச பொருளாதார தடைகள் ஆகியவை வெனிசுலாவை வளங்கள் நிறைந்தாலும் பணமில்லாத நாடாக மாற்றியுள்ளன.

இந்த சூழலில்தான், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், வெனிசுலாவிலிருந்து பெருமளவு எண்ணெய் வாங்கி வந்த சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை “அட்டைக்கத்தி” போல பலவீனப்படுத்தும் அளவிற்கு இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு சாதகமாக அமையலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

அமெரிக்காவின் இந்த நகர்வால் டாலரின் மதிப்பு உயரும், எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்கும், தேசிய கடன் அளவு குறையும் என்றும் சில பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் வளம் கொண்ட நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம், உலகின் “பெட்ரோல் சாம்ராஜ்ஜியம்” அமெரிக்காவின் கைக்குச் சென்றதாகவே தற்போதைய நிலை பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க