பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி வரி வசூலிக்கும் உலகின் வினோதமான நாடுகள் – எந்தெந்த நாடுகள் தெரியுமா?
விபச்சாரம் அல்லது பாலியல் தொழில் உலக வரலாற்றில் பண்டைய காலம் முதலே இருந்து வருகிறது. இந்தியாவில், சில பகுதிகளில் அது சட்டவிரோதமாக இல்லாவிட்டாலும், நாடு முழுவதும் பொதுவாக இது தடைசெய்யப்பட்ட செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் உலகின் பல நாடுகள் இந்தத் தொழிலை முறையாக சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி வசூலித்து, ஒழுங்குமுறையில் நிர்வகிக்கின்றன.
உலகின் 195 நாடுகளில் 77 நாடுகள் பாலியல் தொழிலை முழுமையாக சட்டப்பூர்வமாக்கியுள்ளன. 11 நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அதை அனுமதிக்கின்றன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் இதை அனுமதிக்கின்றன. இந்த நாடுகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
டென்மார்க் 1999-இல் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கியது. இதன் நோக்கம், தொழிலை வெளிப்படையாக நடத்தி கண்காணிப்பதே. இருப்பினும், கட்டாயம், கடத்தல், சிறார்கள் ஈடுபாடு போன்றவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.
பின்லாந்து பாலியல் தொழிலை அனுமதிக்கிறது, ஆனால் பொது இடங்களில் இது தடை. கடத்தப்பட்டவர்களை வாங்குவதும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் சட்டவிரோதம். 1990-களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தத் தொழில் பரவலாக பரவியது. இன்று, இது இணையம் மற்றும் தனிப்பட்ட விளம்பரங்கள் மூலம் இயங்குகிறது.
கோஸ்டா ரிகாவில் பாலியல் தொழில் முற்றிலும் சட்டப்பூர்வமானது. குறிப்பாக சுற்றுலா மையங்களில் இது சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும், சிறார்கள் ஈடுபாடு, கடத்தல் போன்றவை கண்டிப்பாக தடை. இருந்தாலும், இந்த நாடு மனித கடத்தலுக்கு ஒரு முக்கிய இடமாக இருப்பது வருத்தமளிக்கிறது.
அர்ஜென்டினாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடலாம். ஆனால், கடத்தல், கட்டாயம், விடுதி நிர்வாகம் போன்றவை சட்டவிரோதம். மனித கடத்தல் ஒரு தொடர் பிரச்சினையாக உள்ளது.
கனடாவில் பாலியல் தொழில் தனிப்பட்ட முறையில் சட்டப்பூர்வம். ஆனால், பாலியல் விடுதிகள், பொது இடங்களில் தொடர்பு கொள்வது, விளம்பரம் செய்வது ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.
பெல்ஜியம் பாலியல் தொழிலை அனுமதிக்கிறது, ஆனால் விடுதிகள் தடை. இருப்பினும், பல விடுதிகள் வெளிப்படையாக இயங்குகின்றன. அதிகாரிகள் இவற்றை கண்காணிக்க முயற்சிப்பதில்லை.
பிரான்ஸ் பாலியல் தொழிலை அனுமதிக்கிறது, ஆனால் விடுதிகள், விளம்பரங்கள் தடை. 2003-இல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம், உடை, தோரணை போன்றவற்றைக் கூட "விளம்பரம்" எனக் கருதி தண்டிக்கிறது. இதனால் பல பெண்கள் போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனி உலகின் மிகப்பெரிய சட்டபூர்வ பாலியல் தொழில் சந்தைகளில் ஒன்று. இங்கு சுமார் 4 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு 6 பில்லியன் யூரோ வருவாய் ஈட்டப்படுகிறது. தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், சுகாதார காப்பீடு, 40 மணி நேர வேலை வாரம் மற்றும் சங்க உறுப்பின்மை போன்ற உரிமைகள் உண்டு.
கிரீஸ் பண்டைய காலத்திலிருந்தே பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்திய நாடு. இன்று, 21 வயதுக்கு மேற்பட்டவர்கள், உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவு செய்து, இரு வாரங்களுக்கு ஒருமுறை சுகாதார சான்றிதழ் பெற்றால் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட முடியும். விடுதிகள் சட்டப்பூர்வம், ஆனால் உரிமம் பெற்றவை மிகக் குறைவு.
சுவிட்சர்லாந்துவில் பாலியல் தொழிலாளர்கள் பதிவு செய்து, தொடர்ந்து சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். தெரு விபச்சாரம் தடை, ஆனால் விடுதிகள் சட்டப்பூர்வம். முக்கிய நகரங்களில் சிவப்பு விளக்கு மாவட்டங்கள் உள்ளன.
நெதர்லாந்து 2000-இல் பாலியல் தொழிலை முறைப்படுத்தியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் ஈடுபடலாம்; வாடிக்கையாளர்கள் 16 வயதுக்கு மேலாக இருக்க வேண்டும். விடுதிகளும் பதிவு செய்து வரி செலுத்த வேண்டும்.
மெக்சிகோவில் பாலியல் தொழில் குற்றமற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாநில அளவில் பதிவு செய்து, தொடர்ந்து சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சிவப்பு விளக்கு மாவட்டங்களில் மட்டுமே இயங்க அனுமதி. 31 மாநிலங்களில் 13 மாநிலங்கள் இதை தீவிரமாக ஒழுங்குபடுத்துகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இந்த தகவல் பொது மூலங்கள் மற்றும் உலகளாவிய சட்ட நிலவரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.)