சீனாவின் புதிய தங்க வயல்: விலை அப்படியே சரியப்போகுதா? நடக்கப்போகும் மாற்றம்! நிபுணர்கள் சொல்வது என்ன?
வழக்கமாக, 8 கிராம் தங்கம் கொண்ட பாறையே உயர்தரமான தங்க வயலாகக் கருதப்படும் நிலையில், இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய தங்க வயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வயலில் 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. மேலும், ஒரு டன் பாறையில் சராசரியாக 138 கிராம் தங்கம் கிடைக்கிறது என்பது இந்த வயலின் அசாதாரண செறிவைக் காட்டுகிறது.
வழக்கமாக, 8 கிராம் தங்கம் கொண்ட பாறையே உயர்தரமான தங்க வயலாகக் கருதப்படும் நிலையில், இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதும், உலகச் சந்தையில் தங்க விலை குறையும் என்ற ஊகங்கள் எழுந்தன. ஆனால், நிபுணர்கள் இதை வலியுறுத்திய ஊகமாக மட்டுமே கருதுகின்றனர். ஏனெனில், இந்த தங்க வயல் தரையிலிருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இதுபோன்ற ஆழமான சுரங்கங்களிலிருந்து தங்கத்தை எடுப்பது மிகவும் செலவு அதிகமானதும், தொழில்நுட்ப ரீதியாக சவாலானதுமாக உள்ளது.
மேலும், இந்த திட்டத்தை இப்போது தொடங்கினாலும்கூட, உண்மையான உற்பத்தி 2035-க்குப் பிறகே தொடங்க வாய்ப்புள்ளது. அப்போதும், ஆண்டுக்கு அதிகபட்சம் 15 முதல் 30 டன் தங்கம்தான் எடுக்க முடியும். உலகளாவிய ஆண்டுத் தேவை சுமார் 3,600 டன் என்பதைக் கருத்தில் கொண்டால், சீனாவின் இந்தப் பங்களிப்பு மொத்தத்தில் 1% முதல் 3% அளவில் மட்டுமே இருக்கும்.
இன்னொரு முக்கியமான காரணி என்னவென்றால், சீனா இத்தகைய தங்கத்தை உடனடியாக சர்வதேச சந்தையில் விற்கப்போவதில்லை. மாறாக, தனது மத்திய வங்கி மூலம் தங்க இருப்பை அதிகரிக்கவே இதைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா போலவே, சீனாவும் தனது கரன்சியின் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்காகத் தங்கத்தை மூலோபாய ரீதியாகப் பயன்படுத்தும்.
எனவே, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, சீனாவின் இந்தக் கண்டுபிடிப்பு தங்க விலையை உடனடியாக அல்லது குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மாறாக, தங்கம் தொடர்ந்து ஒரு பாதுகாப்பான முதலீடாகவே இருக்கும் என்றும், முடிந்த அளவு சேமிப்பது நல்லது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Editorial Staff