19 வயதில் 8 திருமணங்கள்! திருமணம் ஆகாத ஆண்களை இலக்காக வைத்து பணம், நகை கொள்ளையடித்த பெண்

இந்த இளம்பெண், தனது உறவினர் பெண் சந்தியாவுடன் இணைந்து, திருமணம் ஆகாத, ஆனால் திருமணம் செய்யத் தயாராக இருக்கும் ஆண்களை இலக்காக வைத்து வலை வீசியுள்ளார்.

19 வயதில் 8 திருமணங்கள்! திருமணம் ஆகாத ஆண்களை இலக்காக வைத்து பணம், நகை கொள்ளையடித்த பெண்

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரம் பகுதியில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெறும் 19 வயதான வாணி என்ற பெண், திருமணத்தின் பெயரில் ஏழு அல்லது எட்டு ஆண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம், நகை மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்களைத் திருடிவிட்டு மாயமாகியிருக்கிறார்.

இந்த இளம்பெண், தனது உறவினர் பெண் சந்தியாவுடன் இணைந்து, திருமணம் ஆகாத, ஆனால் திருமணம் செய்யத் தயாராக இருக்கும் ஆண்களை இலக்காக வைத்து வலை வீசியுள்ளார். திருமணத்திற்கு முன்பே பணம், துணி, நகை போன்றவற்றைப் பெற்ற பின், சில நாட்களில் கணவர் மற்றும் அவரது குடும்பத்திடம் தெரிவிக்காமல் மாயமாகி விடுவார்.

சமீபத்தில், கர்நாடகாவின் துர்கா தேவி கோவிலில் ஒரு ஆணுடன் திருமணம் செய்த வாணி, திருமணத்திற்குப் பிறகு ரயில் பயணம் மேற்கொண்டபோது விசனிங்கபுரம் ரயில் நிலையத்தில் “கழிவறை போக வேண்டும்” என்று கூறி இறங்கி, அப்படியே மாயமானார். அந்த ஆண் அவரைத் தேடி, இச்சாபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கண்டுபிடித்தார். அப்போது வாணி, ரூ.1 லட்சம் உள்ளிட்ட திருமண செலவுகள் அனைத்தையும் பெற்றிருந்தார். உறவினர் பெண் “பணத்தை சீக்கிரம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, இருவரும் மாயமாகிவிட்டனர்.

இதுவரை நாகி ரெட்டி, கேஷவா ரெட்டி உள்ளிட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில், எட்டு ஆண்கள் வாணியால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர்.

வாணியுடன் இணைந்து செயல்பட்ட சந்தியா என்ற உறவினர் பெண், இந்த மோசடிகளில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறார். அவரது தந்தை கூட, “அவளை நான் வளர்க்கவே இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முந்தைய திருமணங்களின்போது வாணி 18 வயதிற்கு குறைவாக இருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது – இது சட்டவிரோத திருமணம் மற்றும் குழந்தைத் திருமணம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும்.