வங்கதேசத்தில் ஆணுறைகளுக்கு கடும் தட்டுப்பாடு... 38 நாட்களுக்கு மட்டும்தான்.. போராட்டம், வன்முறைக்கு மத்தியில் புதிய நெருக்கடி!
கருத்தடை சாதனங்களில் முதன்மையானவையான ஆணுறைகள் தற்போது மிகக் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
வங்கதேசம் தற்போது பல நெருக்கடிகளின் மத்தியில் சிக்கித் தவிக்கிறது. அரசியல் போராட்டங்கள், மாணவர் வன்முறைகள் மற்றும் பொது ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றுக்கு மத்தியில், இப்போது ஒரு சிறியதாகத் தெரியும் பிரச்சினை – ஆணுறைகளுக்கான (காண்டம்) கடும் தட்டுப்பாடு – நாட்டை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏற்கனவே 15 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசம், கடந்த ஆண்டு அரசியல் அதிர்ச்சி அனுபவித்தது. ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறி, நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்து வெளிநாட்டில் தஞ்சம் பெற்றார். அதன் பின்னர், இடைக்கால அரசு முகம்மது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்டது. வரும் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாணவர் தலைவர் ஷாரிப் ஒஸ்மான் ஹைதி கொலை செய்யப்பட்டது மீண்டும் நாடு முழுவதும் வன்முறைகளைத் தூண்டியுள்ளது.
இந்தச் சூழலில், வங்கதேசத்தின் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கே பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கருத்தடை சாதனங்களில் முதன்மையானவையான ஆணுறைகள் தற்போது மிகக் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அதிகாரிகள் தெரிவிப்பது என்னவெனில், இன்னும் 38 நாட்களில் நாடு முழுவதும் ஆணுறைகள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளாக ஆணுறை விநியோகம் 57% குறைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறை, களப் பணியாளர்களின் பற்றாக்குறை, சட்ட சிக்கல்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுத்தம் ஆகியவை இந்தத் தட்டுப்பாட்டின் முக்கிய காரணிகளாக உள்ளன.
மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வங்கதேசம் ஐந்து கட்ட கருத்தடை முறைகளை – ஆணுறை, மாத்திரை, ஊசி மருந்து, காப்பர்-டி, குடலறுப்பு நடவடிக்கைகள் – பயன்படுத்தி வருகிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாட்டில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளது. பலர் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்பும் போக்கில் உள்ளனர்.
இதன் விளைவாக, மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2023இல் 2.3 ஆக இருந்தது தற்போது 2.4 ஆக உயர்ந்துள்ளது. ஆணுறை பற்றாக்குறை இந்த விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
டாக்கா பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை அறிவியல் துறை பேராசிரியர் அமினுல் இஸ்லாம் கூறுகையில், “இந்தத் தட்டுப்பாடு படிப்படியாக வந்துள்ளது. தற்போது இது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது,” என்றார்.
Editorial Staff