மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கான காரணங்கள் – எப்போது கவலைப்பட வேண்டும்?
சிலருக்கு மாதவிடாய் திடீரென முன்கூட்டியே வருவது அல்லது அடிக்கடி வருவது கவலைக்குரியதாக இருக்கலாம். இதற்கு பல உடல் மற்றும் உளவியல் காரணிகள் பதிலாக இருக்கலாம்.
பெண்களின் மாதவிடாய் சுழற்சி பொதுவாக 21 நாட்களில் இருந்து 35 நாட்கள் வரை இருக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுவது இயல்பு. ஆனால், சிலருக்கு மாதவிடாய் திடீரென முன்கூட்டியே வருவது அல்லது அடிக்கடி வருவது கவலைக்குரியதாக இருக்கலாம். இதற்கு பல உடல் மற்றும் உளவியல் காரணிகள் பதிலாக இருக்கலாம்.
1. ப்ரீமெனோபாஸ் (Premenopause):
40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் ப்ரீமெனோபாஸ், ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உருவாக்குகிறது. இதனால் அண்டவிடுப்பு ஒழுங்கற்ற முறையில் நடக்கும். இது மாதவிடாயை முன்கூட்டியே அல்லது தாமதமாக ஏற்படுத்தலாம். சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்றுவிடும்.
2. தீவிர உடற்பயிற்சி:
விளையாட்டு வீராங்கனைகள் உள்பட அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, உடலில் ஆற்றல் குறைவு ஏற்பட்டு, இனப்பெருக்க செயல்பாடுகள் மெதுவாகின்றன. இதனால் மாதவிடாய் முன்கூட்டியோ, அல்லது சில மாதங்களுக்கு முற்றிலும் நின்றோ வரலாம்.
3. திடீர் எடை மாற்றங்கள்:
குறைந்த நாட்களில் அதிக எடை குறைவு அல்லது அதிகரிப்பு என்பது ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இது மாதவிடாய் சுழற்சியை முன்கூட்டியே அல்லது காலதாமதமாக வர வைக்கலாம்.
4. மன அழுத்தம்:
கடுமையான மன அழுத்தம், கவலை, துயரம் அல்லது வாழ்க்கையில் ஏற்படும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், ஹைப்போதலாமஸ் என்ற மூளைப் பகுதியின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இது மாதவிடாய் ஒழுங்கைக் குலைக்கும். மன அழுத்தத்தை குறைப்பது மூலம் இந்த சுழற்சி சாதாரண நிலைக்குத் திரும்பலாம்.
5. PCOS (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்):
ஹார்மோன் சமநிலையின்மையின் காரணமாக ஏற்படும் PCOS, மாதவிடாய் சுழற்சியை மிகவும் பாதிக்கிறது. பல பெண்களுக்கு கர்ப்பமாகும் முயற்சியில் சிரமம் ஏற்படும்போதுதான் இந்நோய் தெரிய வருகிறது. இது அடிக்கடி அல்லது முற்றிலும் மாதவிடாய் வராமல் இருப்பது, முகப்பரு, அதிக முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
உங்கள் மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கு குறைவாக இருந்தால், அடிக்கடி மாறி வந்தால், அல்லது மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது அவசியம். சத்தான உணவு, போதுமான உறக்கம், மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான உடற்பயிற்சி ஆகியவை மாதவிடாய் சுழற்சியை ஒழுங்காக வைத்திருக்க உதவும்.
Editorial Staff