மண்ணில் கிடந்த அதிர்ஷ்டம்: தலைமுறைகளாக தேடி கிடைக்காத வைரம் நண்பர்களுக்கு கைகூடியது!

இந்த நண்பர்களின் குடும்பங்களும் பல ஆண்டுகளாக வைரங்களைத் தேடி வந்தபோதும், இதுவரை யாருக்கும் ஒரு வைரக்கல் கூட கிடைக்கவில்லை. ஆனால், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அதிர்ஷ்டம் இந்த இரு நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் கைகூடியது.

மண்ணில் கிடந்த அதிர்ஷ்டம்: தலைமுறைகளாக தேடி கிடைக்காத வைரம் நண்பர்களுக்கு கைகூடியது!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வைரங்களுக்கு பெயர் பெற்ற பன்னா பகுதியில், இரு நண்பர்களுக்கு தற்செயலாக கிடைத்த வைரக்கல் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தரையில் கிடந்த அந்த வைரக்கல்லின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.55 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் சதீஷ் மற்றும் சஜித், வாடகைக்கு எடுத்திருந்த ஒரு நிலப்பகுதியில் வழக்கம்போல் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண்ணில் புதைந்திருந்த வைரக்கல்லை கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அதன் மதிப்பை அறிய, அந்த வைரத்தை அதிகாரப்பூர்வ வைரச் சோதனையாளரிடம் எடுத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்ததில், அது மிக அரிய வகையைச் சேர்ந்த 15.34 காரட் எடையுள்ள உயர்தர வைரம் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை BBC ஊடகம் வெளியிட்டுள்ளது. விரைவில் அந்த வைரக்கல் அரசு மேற்பார்வையில் ஏலத்தில் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏலத்தில் கிடைக்கும் தொகையை வைத்து தங்களின் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக நண்பர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, சகோதரிகளின் திருமண செலவுகளுக்காக இந்த பணம் பெரிதும் உதவும் என அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தொழில்முறையில், சதீஷ் ஒரு இறைச்சிக் கடை நடத்தி வருகிறார்; சஜித் ஒரு பழக்கடை நடத்தி வருகிறார். இருவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வைரங்கள் கிடைக்கும் பன்னா பகுதியில் வாழும் பல குடும்பங்கள், கூடுதல் வருமானம் பெறும் நோக்கில் தலைமுறை தலைமுறையாக வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இந்த நண்பர்களின் குடும்பங்களும் பல ஆண்டுகளாக வைரங்களைத் தேடி வந்தபோதும், இதுவரை யாருக்கும் ஒரு வைரக்கல் கூட கிடைக்கவில்லை. ஆனால், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அதிர்ஷ்டம் இந்த இரு நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் கைகூடியது, பன்னா மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.