விபத்தில் சிக்கிய விஜய் கார்.. ரசிகர்கள் கூட்ட நெரிசலில் தரையில் விழுந்த நடிகர் விஜய்! என்ன நடந்தது?

கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் விஜய்யும் தரையில் விழுந்தார். உடனடியாக அவரை பாதுகாவலர்கள் உதவியுடன் எழுப்பி, பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய விஜய் கார்.. ரசிகர்கள் கூட்ட நெரிசலில் தரையில் விழுந்த நடிகர் விஜய்! என்ன நடந்தது?

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சென்னை திரும்பிய நடிகர் விஜய்க்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் பெருந்திரளாக வரவேற்பு அளித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் விஜய் தரையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தின் வெளியேற்ற வாயிலில் இருந்து தனது காரை நோக்கி நடந்து சென்ற விஜயை, ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் சூழ்ந்து வரவேற்றனர். களேபரம் அதிகமாக இருந்ததால், அவரது பாதுகாவலர்கள், சென்னை விமான நிலைய போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்ற முயற்சித்தனர்.

அப்போது, கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் விஜய்யும் தரையில் விழுந்தார். உடனடியாக அவரை பாதுகாவலர்கள் உதவியுடன் எழுப்பி, பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ஆனால், விஜய் அங்கிருந்து புறப்பட்ட உடனேயே அவரது கார் மீது மற்றொரு கார் மோதி சிறிய விபத்து ஏற்பட்டது. பின்னோக்கி ரிவர்ஸில் வந்த அந்த வாகனம், விஜய் இருந்த காரின் முன்புறத்தில் மோதியது. இதில், காரின் இண்டிகேட்டர் (சுட்டிப்பகுதி) சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தில் விஜய் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதன் பிறகு விஜய் பாதுகாப்புடன் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜயின் கடைசி நடிப்புப் படமாக இருக்கும் என்று அவரே அறிவித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ மேனன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் களமிறங்கிய நிலையில், இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.