ஒரு தவறை மறைக்க அடுத்தடுத்த தவறு... கள்ளக்காதலை மறைக்க கணவரை பலி கொடுத்த மனைவி!

Published on: 13 Jan 2026, 10:26 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஜோதிக்கும் அவரது மருமகனுக்கும் நீண்ட காலமாக தவறான உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் அந்த நபரின் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், உறவு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

ஒரு தவறை மறைக்க அடுத்தடுத்த தவறு... கள்ளக்காதலை மறைக்க கணவரை பலி கொடுத்த மனைவி!

ஒரு தவறை மறைக்க அடுத்தடுத்த தவறுகளைச் செய்து, இறுதியில் கணவரின் உயிரையே பறித்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தை உலுக்கியுள்ளது. கணவன், மகள் என எந்த உறவையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த மனிதநேயமற்ற செயல், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அருகே எரங்காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வந்த 47 வயதான ஆறுமுகம், ஒரு மருந்துக் கடையில் பணியாற்றி வந்தார். அவருக்கு ஜோதி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 7ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற ஆறுமுகம், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் கழிந்தும் அவர் வராததால் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர்.

இதையடுத்து, 9ஆம் தேதி அவரது மனைவி ஜோதி தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் பணியை தொடங்கினர். இந்த நிலையில், மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள தூதரையான் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அது மாயமான ஆறுமுகம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்காக விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் போதே ஆறுமுகத்தின் மனைவி ஜோதி மீது சந்தேகம் எழுந்தது. காவல் விசாரணையில், அவர் நடந்த சம்பவங்களை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் வெளியான தகவல்களின்படி, ஜோதிக்கும் அவரது மருமகனுக்கும் நீண்ட காலமாக தவறான உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் அந்த நபரின் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், உறவு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், அந்த நபரின் வற்புறுத்தலால் ஜோதி தனது மூத்த மகளுக்கே அவருடன் திருமணம் செய்து வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருமணத்திற்கு ஆறுமுகத்துக்கும் அவரது மகளுக்கும் விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

பின்னர், இந்த தவறான உறவு குறித்து ஆறுமுகம் அறிந்ததும் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை நீக்க முடிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். திட்டமிட்டபடி, ஜோதி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட சிலர் இணைந்து, 7ஆம் தேதி ஆறுமுகத்தை கடத்திச் சென்று தாக்கி கொலை செய்து, பின்னர் ஏரியில் வீசியதாக விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்ப உறவுகளையே மறந்து நடந்த இந்த கொடூர சம்பவம், தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW