கழிவறையில் சராசரியாக எவ்வளவு நிமிடம் அமரலாம்? இதற்கு மேல் போனால் டேஞ்சர் – மருத்துவ எச்சரிக்கை
கழிவறையில் அதிக நேரம் அமர்ந்திருப்பது மூல நோய், தசைப் பலவீனம், ரத்த ஓட்டக் குறைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவர் சராசரியாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே கழிவறையில் செலவிட வேண்டும்.
நம்மில் பலர் கழிவறையில் அமர்ந்தவுடன் மொபைல் போனில் ரீல்ஸ், சமூக ஊடகங்கள் என மூழ்கிப்போய், அரை மணி நேரம் கூட அப்படியே அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால், இந்தப் பழக்கம் அன்றைய நாளில் சாதாரணமாகத் தோன்றினாலும், நாளடைவில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழிவறையில் ஒருவர் சராசரியாக எவ்வளவு நேரம் அமர்ந்திருக்க வேண்டும், அதற்கு மேல் சென்றால் என்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கழிவறையில் நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பாதிப்புகள்
மூல நோய் (பைல்ஸ்) உருவாகும்: ஒருவர் கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு அழுத்தம் கொடுப்பதால், ஆசனவாயில் வீக்கம் ஏற்பட்டு மூல நோய் உருவாகிறது. இதனால் மலம் கழிக்கும்போது கடுமையான வலி, வீக்கம், அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தசை பலவீனம்: குடலைத் தாங்குவதிலும், சிறுநீர்ப்பையைத் தாங்குவதிலும் பெல்விக் தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது இந்தத் தசைகள் பலவீனமாகும். இது மலம் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதோடு, இடுப்புப் பகுதியில் பலவீனத்தையும் உண்டாக்கும்.
ரத்த ஓட்டம் பாதிப்பு: ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, உடலின் கீழ்ப்பகுதிக்கான ரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளுக்குத் தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு, கால்கள் மரத்துப்போகும். கால்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கும் இதுவே காரணமாகும்.
கழிவறையில் அதிக நேரம் செலவிடுவதற்கான முக்கிய காரணம்
பெரும்பாலானோர் கழிவறையில் அதிக நேரம் செலவிடுவதற்கு மலச்சிக்கலே முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
சாப்பிடும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மலம் வரும்போது அதை அடக்கி வைத்து பின்னர் போகலாம் எனத் தள்ளிப்போடுவது ஆகியவை மலச்சிக்கலை உருவாக்குகின்றன.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சரியான நேரம் மற்றும் பழக்கங்கள்
ஒருவர் கழிவறையில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இயல்பாக மலம் கழிக்க வரவில்லை என்றால், தொடர்ந்து கழிவறையில் அமர்ந்திருக்கக் கூடாது. மலம் கழிக்கும் உணர்வு வரும்போது மட்டுமே செல்ல வேண்டும். மேலும், கழிவறைக்குச் செல்லும்போது கையில் மொபைல் போனை எடுத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மொபைல் பயன்பாடுதான் கவனச்சிதறலை ஏற்படுத்தி, நேரம் போவதே தெரியாமல் செய்கிறது. இந்த எளிய பழக்க மாற்றங்கள் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான மருத்துவக் கண்ணோட்டம் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு எப்போதும் மருத்துவரை அணுகுவது நல்லது.)