“என் இனிய தமிழ் மக்களே!” - இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையை உலகுக்குக் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு இது. 1941-ல் பிறந்த இவர், ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.


“என் இனிய தமிழ் மக்களே!” - இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டூடியோவுக்குள் மட்டும் அடைபட்டுக் கிடந்த சினிமாவைக் கிராமத்துக்கு அழைத்துச் சென்று, மண்வாசனையுடன் படத்தைக் கொடுத்தவர். கதாநாயகன் என்றால் அழகானவனாக இருக்க வேண்டும் என்பதை மாற்றி, கோவணம் கட்டி வெற்றிலை சொதப்பும் சப்பாணியாக மாற்றிக் காட்டியவர்.

பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகு என்று சொல்லும் அளவுக்குத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். பாரதிராஜா 1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி, தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பெரிய மாயத்தேவர் – மீனாட்சி அம்மாள் (கருத்தம்மா) தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. இவருக்கு மூன்று சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர்.

பள்ளிப் பருவத்திலேயே நடிக்கும் ஆர்வம் கொண்ட பாரதிராஜா, நாடகங்கள் பார்த்து வளர்ந்தவர்; நாடகம் போடும் அளவுக்குக் கதை எழுதினார். சிறிது காலம் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றினார். அப்போது பண்ணைபுரம் சென்றபோது, அங்கு இசை வாசித்துக் கொண்டிருந்த இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இவர்கள் நண்பர்களானார்கள். பாரதிராஜா இயக்கிய ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. சினிமாவில் பெரும் புகழ் பெறலாம் என்று நினைத்து, முதலில் ‘அன்னக்கிளி’ செல்வராஜும், பின்னர் பாரதிராஜாவும் சென்னை வந்தனர். ஆனால் ஆரம்பத்தில் வாய்ப்பு அமைக்கவில்லை. வாழ்க்கை போராட்டமாக இருந்தது.

பின்னர், பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் சென்னை வந்து, சங்கிலிமுருகன் நாடகங்களுக்கு இசை அமைத்தனர். அந்த இசைக் கச்சேரிகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்து பாடினார். பின்னர், இளையராஜா இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் கிட்டார் வாசிக்கச் சென்றார். அதன் மூலம், இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் பாரதிராஜா உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.

‘இருளும் ஒளியும்’, ‘தலைபிரசவம்’, ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பாரதிராஜாவின் திறமையை அறிந்த தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., அவருக்குப் படம் இயக்கும் வாய்ப்பு வழங்கினார். ஆனால் ‘சொந்த வீடு’ என்ற அந்தப் படம், கதாநாயகி ஜெயலலிதா விலகிக்கொண்டதால் கைவிடப்பட்டது.

பின்னர், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பாரதிராஜா ‘மயிலு’ என்ற கதையைச் சொல்ல, அது ‘16 வயதினிலே’ என்ற பெயரில் உருவானது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியான இப்படம் மெகா ஹிட்டானது. இதன் மூலம் பாரதிராஜா சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார்.

அடுத்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வழங்கினார். இயக்குநராக மட்டுமல்லாமல், ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதில் அருணா, விஜயசாந்தியை அறிமுகப்படுத்தினார். பின்னர் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக மீண்டும் சிறந்த இயக்குநர் விருது பெற்றார்.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தைத் தெலுங்கிலும் இந்தியிலும் இயக்கிய பாரதிராஜா, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண்வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘வேதம் புதிது’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘அன்னக்கொடி’, ‘மீண்டும் ஒரு மரியாதை’ உள்ளிட்ட 44-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் பல தேசிய விருதுகளையும், மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

2004ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. இவர் தனது சகோதரியின் மகள் சந்திரலீலாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மனோஜ் (மகன்) மற்றும் ஜனனி (மகள்) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகன் மனோஜ் ‘தாஜ்மகால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்தார். ஆனால், கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். பாரதிராஜா தன்னுடைய 84-வது வயதில், 2026 ஜூன் 10ஆம் தேதி சென்னையில் காலமானார்.

அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். “என் இனிய தமிழ் மக்களே” என்று எப்போதும் தனது உரையைத் தொடங்கும் பாரதிராஜாவின் குரல் மவுனமாகியிருந்தாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், அவர் விதைத்த கிராமிய சினிமா விதையும் என்றென்றும் வாழும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க