ஆங்கிலத் தேர்வு இல்லை! அகதிகள் குறித்து வெளியான தகவல் –பிரித்தானியாவில் வெடித்த சர்ச்சை

எல்லை பாதுகாப்பு அமைச்சரான Alex Norris வெளியிட்ட விளக்கம், ஆளுங்கட்சியினரையும் எதிர்க்கட்சியினரையும் ஒருசேர ஆத்திரமடையச் செய்துள்ளது.
ஆங்கிலத் தேர்வு இல்லை! அகதிகள் குறித்து வெளியான தகவல் –பிரித்தானியாவில் வெடித்த சர்ச்சை

பிரித்தானியாவில் அகதிகள் தொடர்பான குடியேற்ற விதிகள் குறித்து வெளியான புதிய தகவல், அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லேபர் அரசின் கீழ் உள்துறைச் செயலராக செயல்பட்டு வரும் Shabana Mahmood, குடியமர்வு உரிமைகளுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில கடுமையான நிபந்தனைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதில், குற்றப் பின்னணி இல்லாதிருத்தல், ஆங்கில மொழியில் புலமை பெற்றிருத்தல் மற்றும் கடன் சுமை இல்லாதிருத்தல் ஆகியவை முக்கிய தகுதிகளாக குறிப்பிடப்பட்டன.

இந்த நிலையில், எல்லை பாதுகாப்பு அமைச்சரான Alex Norris வெளியிட்ட விளக்கம், ஆளுங்கட்சியினரையும் எதிர்க்கட்சியினரையும் ஒருசேர ஆத்திரமடையச் செய்துள்ளது. ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ள இந்த நிபந்தனைகள், புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் அகதிகளுக்கு பொருந்தாது என அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். அதாவது, அகதிகளாக பிரித்தானியாவுக்கு வரும் நபர்களுக்கு ஆங்கிலப் புலமை கட்டாய நிபந்தனையல்ல என்பதே அவரது விளக்கம்.

உள்துறை அலுவலக வட்டாரங்கள், காலவரையறையின்றி பிரித்தானியாவில் தங்குவதற்காக விண்ணப்பிக்கும் அகதிகள், ஒரு கட்டத்தில் ஆங்கில மொழி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என கூறினாலும், நோரிஸ் இதை சட்டப்பூர்வ கோணத்தில் விளக்கியுள்ளார். அகதிகள் நிலை தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களுக்கும், மனித உரிமைகள் தொடர்பான European Convention on Human Rights உடன்படிக்கைக்கும் பிரித்தானியா கையொப்பமிட்டுள்ளதால், புகலிடம் கோரி வரும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிப்பது நாட்டின் சட்டபூர்வ கடமையாகும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒருவரை நாட்டிலிருந்து அகற்றும் எந்த நிலையிலும், அவர்களின் மனித உரிமைகள் அவசியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அந்த நபர் ஆங்கிலம் பேசக்கூடியவரா இல்லையா என்பது இதற்கு தடையாக இருக்க முடியாது என்றும் நோரிஸ் தெரிவித்தார். தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் போது, அங்கு துன்புறுத்தல் அல்லது கடுமையான ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருந்தால், அவர்களை அந்நாட்டிற்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கும் அனுப்பக்கூடாது என்பதே இந்த சட்டங்களின் அடிப்படை நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.

இதன் பின்னணியில், “அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியமில்லை” என்ற அலெக்ஸ் நோரிஸின் கூற்று, பிரித்தானிய அரசியலில் புதிய விவாதத்தையும் கடும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர