விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான சினேகா! நடக்கவே முடியாது என்ற டாக்டர்கள்... மேடையில் கலங்கிய சினேகா
தமிழ் சினிமாவில் ‘புன்னகையரசி’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, சமீபத்தில் நடைபெற்ற அவள் விகடன் விருது விழாவில் உணர்ச்சிபூர்வமாக தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்துகொண்டார். ஹீரோயினாக பல வெற்றி படங்களில் நடித்த இவர், தற்போது குணச்சித்திர மற்றும் துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
விழாவில் ‘அவள் ஐகான்’ விருதை கரு. பழனியப்பன் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட சினேகா, தனது சினிமா ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தை நினைவுகூர்ந்தார். சினிமாவுக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அந்த விபத்தில் கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கடுமையாக காயம் ஏற்பட்டதாக கூறினார். “எழுந்து நடக்கவே எட்டு மாதங்களுக்கு மேல் ஆகும்” என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் பகிர்ந்தார்.
அந்த கடினமான நேரத்தில், கரு. பழனியப்பன் ‘பார்த்திபன் கனவு’ படத்தின் கதையை சொல்ல வந்ததை சினேகா நினைவுபடுத்தினார். “நான் நடக்கவே முடியாத நிலையில் இருக்கிறேன்; என்ன நம்பிக்கையில் கதை சொல்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “இன்னும் ஒரு மாதத்தில் நீங்க நடப்பீங்க” என்று அவர் உறுதியளித்ததாக கூறினார். அந்த நம்பிக்கைதான் தன்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது என்றும், ஒன்றரை மாதங்களில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
அந்தப் படத்திற்காக தனக்கு விருது கிடைக்காதது வருத்தமளித்ததாகவும், ‘ஆட்டோகிராப்’, ‘பள்ளிக்கூடம்’, ‘பட்டாசு’ போன்ற படங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என பகிர்ந்தார். ஆனால் காலப்போக்கில், விருதுகளை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பதே முக்கியம் என்பதை உணர்ந்ததாக அவர் கூறினார்.
‘ஆட்டோகிராப்’ படம் மீண்டும் வெளியானபோது ரசிகர்கள் பலரும் அழைத்து பாராட்டியதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். ‘பட்டாசு’ படத்தில் நடித்தபோது கர்ப்பமாக இருந்ததாகவும், பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் ‘கோட்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
“இந்த விருதுக்குப் பின்னால் பல வலிகளும், அவமானங்களும் இருக்கின்றன. ஆனால் இன்று இந்த மேடையில் நிற்பதற்கு ரசிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காரணம்,” என்று சினேகா கண்கள் கலங்கியபடி உரையாற்றினார்.
