இங்கிலாந்திடம் இலங்கை வீழ்ந்தது எப்படி? சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அபார வெற்றி!

Published on: 23 Feb 2026, 07:11 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய உற்சாகத்துடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு பெரும் சவாலாக அமைந்தது.

இங்கிலாந்திடம் இலங்கை வீழ்ந்தது எப்படி?  சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அபார வெற்றி!

பல்லேகலேவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியில், இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய உற்சாகத்துடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு பெரும் சவாலாக அமைந்தது. 147 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து படுதோல்வியைச் சந்தித்தது.

இலங்கை அணியின் தோல்விக்கு அந்த அணியின் பேட்டர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதே முக்கியக் காரணமாக அமைந்தது. குறிப்பாக, பவர்பிளே ஓவர்களிலேயே இலங்கை அணி 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.

இங்கிலாந்து கேப்டன் ப்ரூக் அமைத்த வியூகம் மற்றும் ஃபீல்டிங் மாற்றங்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்ற பெரிதும் உதவின. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவர்களில் ஃபீல்டர்களை மாற்றிய விதம் மற்றும் 'ஃப்ளையிங் ஸ்லிப்' திசையில் ஜேமி ஓவர்டனை நிறுத்தியது போன்ற உத்திகளால் பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷாரா ஆகியோரின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்தப் போட்டியின் நாயகனாக இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் வில் ஜேக்ஸ் ஜொலித்தார். பேட்டிங்கில் இங்கிலாந்து அணி 94/5 எனத் தடுமாறியபோது களம் புகுந்த அவர், 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 140 ரன்களைக் கடக்க உதவினார்.

பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவை (30 ரன்கள்), பவுண்டரி எல்லையில் சமயோசிதமாகச் செயல்பட்டு டாம் பேன்டனிடம் பந்தைக் கைமாற்றி அவுட் செய்ய உதவினார்.

இலங்கை பேட்டர்கள் ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் காட்டிய தடுமாற்றம் ஏமாற்றமளிப்பதாக வர்ணனையாளர் சங்கக்காரா தெரிவித்தார். இலங்கை அணியில் எந்தவொரு பார்ட்னர்ஷிப்பும் 20 ரன்களைத் தாண்டாதது அந்த அணியின் பலவீனத்தை வெளிப்படுத்தியது.

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் அசத்திய வில் ஜேக்ஸ், இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW