சீனாவின் அணு ஆயுத குவிப்பு: ஸ்டார்மரின் சீன பயணத்தில் முக்கிய விவகாரம் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு மேற்கொண்ட அண்மைய விஜயத்தின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் தைவான் தொடர்பான விவகாரங்கள் குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனுடன், சீனாவின் வேகமாக அதிகரித்து வரும் அணு ஆயுத குவிப்பு குறித்த முக்கிய பிரச்சினையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விடயத்தை பிரித்தானிய ஊடகமான The Guardian சுட்டிக்காட்டியுள்ளது. அந்த செய்தியின் படி, சீனா தற்போது உலகில் மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வரும் நாடாக மாறியுள்ளது. இதனை Stockholm International Peace Research Institute (SIPRI) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.
அறிக்கையின் தகவல்களின்படி, தற்போதைய நிலையில் சீனாவிடம் சுமார் 600 அணு போர்முனைகள் உள்ளன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 100 புதிய போர்முனைகள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உலகளவில் அணு ஆயுத களஞ்சியங்களில் பெரும்பான்மையை இதுவரை அமெரிக்கா மற்றும் ரஷ்யா வைத்திருந்தாலும், சீனா விரைவில் அதே அளவிற்கு வளர்ச்சி அடையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், சீனாவின் அணு ஆயுத விரிவாக்கம் தைவான் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக மாறக்கூடும் என United States Department of Defense எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருபுறம், பெரிய அணு ஆயுத நாடுகள் முதலில் ஆயுதக் குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் தனது சொந்த அணு ஆயுத வளர்ச்சி குறித்து வெளிப்படையான விளக்கங்களை வழங்காமல், பல்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதுவே உலக அமைதிக்கு வருங்காலத்தில், குறிப்பாக அடுத்த ஆண்டுகளில், ஒரு பெரிய சவாலாக மாறும் என அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய பின்னணியில், ஸ்டார்மரின் சீன விஜயத்தின் போது இந்த வளர்ந்து வரும் அணு ஆயுத சவால் குறித்து எந்தவிதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்பது அரசியல் அவதானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையில், இந்த விஜயம் பாதுகாப்பு அல்லது அரசியல் விவகாரங்களை விட, பெரும்பாலும் பொருளாதார இலக்குகளை மையமாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையில் வரி விதிப்பை ஒரு அழுத்த கருவியாக பயன்படுத்தி வருவதால், பல நாடுகள் முன்பு விரோதமாக இருந்த நாடுகளுடன்கூட பொருளாதார ரீதியில் கைக்கோர்க்கத் தொடங்கியுள்ளன. அந்த சூழ்நிலையில், பிரித்தானியாவும் சீனாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த விஜயத்தை ஸ்டார்மர் முன்னெடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இதற்கு முன்பே, கனடா இதே அணுகுமுறையை பின்பற்றி சீனாவுடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தியிருந்தது. இதன் அடிப்படையில், அணு ஆயுத விவாதங்களை விட, பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய சந்தைகளுக்கான அணுகலை முன்னுரிமை அளிப்பதே தற்போது ஐரோப்பிய நாடுகளின் கவனமாக உள்ளது. பிரித்தானியாவின் தற்போதைய தேவையும் இதே திசையிலேயே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
