பிரித்தானியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள்: வரிக் கொள்கை மாற்றங்கள் கவலைக்குரியது
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர், அண்மையில் அதிகரித்து வரும் வரி சுமை மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர், அண்மையில் அதிகரித்து வரும் வரி சுமை மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உயர்ந்த வருமானம் கொண்ட திறமையாளர்கள் பலர், பிரித்தானியாவிலிருந்து துபாய் அல்லது இந்தியாவுக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளனர்.
2.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ‘Improbable’ நிறுவனத்தின் CEOயான இந்தியாவில் பிறந்த ஹெர்மான் நருலா (37), இந்த மாற்றத்தின் முக்கிய எடுத்துக்காட்டு. வரவிருக்கும் பிரித்தானிய பட்ஜெட்டிற்கு முன்பே கசிந்த வரிக் கொள்கை விவரங்கள் காரணமாக லண்டனை விட்டு துபாயில் குடியேற முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பட்ஜெட்டில் நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதை அவர் கவலைக்குரியதாகக் குறிப்பிட்டார். அது பின்னர் திரும்பப் பெறப்பட்டாலும், கெய்ர் ஸ்டார்மர் அரசு மீது நம்பிக்கை இல்லை என்றும், பிரித்தானியாவில் வாழ்வது மேலும் கடினமாகி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹெர்மான் நருலாவைப் போல பல செல்வந்தர்களும் லண்டனை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரியோ ஃபெர்டினாண்ட், Revolut நிறுவனத்தின் இணை நிறுவனர் நிக் ஸ்ட்ரோன்ஸ்கி ஆகியோர் துபாயில் ஏற்கனவே குடியேறிவிட்டனர்.
இதற்கிடையில், அரோரா குழுமத் தலைவர் சுரிந்தர் அரோரா, AKQA நிறுவனரான அஜாஸ் அஹ்மத் உள்ளிட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள், பிரித்தானிய சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், செல்வந்தர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகவும், கடந்த ஆண்டின் வரி மாற்றங்களால் தொழிலதிபர்களின் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட்டில் வரிக் கொள்கைகளை அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்றும், நாட்டில் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டுமேயொழிய, அதிக வரிச் சுமையால் அவர்களை இழக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மொத்தத்தில், அதிகரிக்கும் வரிச்சுமை, குறைவான சேவைகள், எதிர்காலத்தில் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் ஆகிய காரணங்களால், பிரித்தானிய செல்வந்தர்கள் பாதுகாப்பான மற்றும் வரிச் சலுகை அதிகமான நாடுகளுக்கு மாறிச் செல்வது வேகமெடுத்துள்ளது.
Editorial Staff