வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்து சென்ற எஸ்.ஐ. சஸ்பெண்டு

இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர்.


வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்து சென்ற எஸ்.ஐ. சஸ்பெண்டு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.

இதனால் அந்த பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் அசோக்குமார் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அசோக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த அசோக்குமார் மீது காரை ஏற்றியுள்ளார். 

அதிர்ஷ்டவசமாக அசோக்குமார் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது.

இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர்.

இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்தபோது அசோக்குமாரும், சப்-இன்ஸ்பெக்டரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மதுபோதையில் வந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜை சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க