இரவு படுக்கைக்கு செல்லும் போது பிரா அணியலாமா.. கூடாதா? மருத்துவ ரீதியான பலன்கள் தெரியுமா?
பிரா அணிந்து கொள்வது உங்களுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ டீனேஜ் வயது முதலில் இருந்து பிராக்கள் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு அங்கமாக நிச்சயமாக மாறி இருக்கும். ஆனால் பிரா அணிவதால் மருத்துவ ரீதியாக ஒரு சில பலன்கள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? .
உண்மையில் மார்பகங்கள் தொங்கி காட்சியளிப்பதை தடுக்க முடியுமா? பிரா அணிந்து கொண்டு தூங்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் கேடு ஏற்படுமா? பிரா அணிவது சம்பந்தமான கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் பொதுவான கட்டுக்கதைகளை பற்றி பார்க்கலாம்.

கட்டுக்கதை 1
பிரா அணிவதால் மார்பகங்கள் தொங்கி காட்சியளிப்பதை தடுக்கலாம் : தினமும் பிரா அணிந்து கொள்வதால் மார்பகங்கள் தொங்கி காட்சியளிப்பதை தடுக்கலாம் என்பது தொடர்ச்சியாக நீடித்து வரும் ஒரு கட்டுக்கதை. ஆனால் உண்மையில் மார்பக தொய்வு என்பது மரபணுக்கள், வயது, கர்ப்ப காலம், உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தூண்டப்படுகிறது. ஆதரவு தரக்கூடிய பிரா அணிவதால் உடற்பயிற்சியின் போது ஏற்படும் அசௌகரியம் குறையுமே தவிர மார்பக திசுக்களின் உட்புற அமைப்பில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது.
கட்டுக்கதை 2
பிரா அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம் : அமெரிக்க புற்றுநோய் அமைப்பு நடத்திய தீவிரமான ஆராய்ச்சியில் இந்த கூற்றை ஆதரவளிக்கும் வகையில் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. புற்றுநோய் என்பது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகிறதே தவிர நீங்கள் என்ன வகையான பிரா அணிகிறீர்கள் அல்லது அதனை எப்படி அணிகிறீர்கள் என்பதை பொறுத்து அல்ல.
கட்டுக்கதை 3
பிரா அணிந்து கொண்டு தூங்கக் கூடாது : பிரா அணிந்து கொண்டு தூங்குவதால் தீங்கு ஏற்படலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். ஆனால் இது தனிநபர் சௌகரியத்தை பொறுத்ததே தவிர இது சம்பந்தமான மருத்துவ காரணங்கள் எதுவும் இல்லை. எனினும், அதே சமயத்தில் நீங்கள் அணிந்திருக்கும் பிரா உங்களுடைய ரத்த ஓட்டத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். பெரிய மார்பகங்கள் கொண்ட ஒரு சில பெண்கள் மென்மையான இரவு முழுவதும் அசௌகரியத்தை குறைப்பதற்கு மென்மையான, வயர்லெஸ் அணிவதை விரும்புகின்றனர்.

கட்டுக்கதை 4
பிரா இறுக்கமாக இருந்தால் சிறந்த ஆதரவு கிடைக்கும் : ஆதரவு என்பது பிரா எந்த அளவிற்கு இறுக்கமாக இருக்கிறது என்பதை பொறுத்தது அல்ல. அது உங்களுக்கு சரியாக பொருந்தி இருக்கிறதா என்பது பற்றியது. பிரா அதிகம் இறுக்கமாக இருந்தால் அதனால் தசைகளின் அசைவுகள் தடைப்பட்டு, தோலில் எரிச்சல் ஏற்படுவதோடு, முதுகு அல்லது தோள்பட்டையில் வலி உண்டாகலாம். எனவே உங்களுக்கு பொருந்தக்கூடிய ஒரு பிராவை எப்பொழுதும் அணியுங்கள்.
கட்டுக்கதை 5
பிரா அளவை ஒரு முறை தெரிந்து கொண்டால், வாழ்நாள் முழுவதற்கும் அதுவே பொருந்தும் : பிரா அளவுகள் என்பது நிரந்தரமானது கிடையாது. உங்களுடைய உடலானது வயது, ஹார்மோன் மாற்றங்கள், உடல் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, கர்ப்பம் அல்லது மெனோபாஸ் போன்ற வாழ்க்கை நிகழ்வுகளால் ஏற்படும் மாற்றங்களால் மாறுபடலாம். எனவே வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஏதேனும் அசௌகரியம் ஏற்படும் பட்சத்தில் உங்களுடைய பிரா அளவை சரி பார்ப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதே போல, பல்வேறு பிராண்டுகள் மற்றும் ஸ்டைல் பொறுத்து பிராக்களின் அளவு மாறுபடும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
