3 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை விதிக்க பிரித்தானியா அதிரடி திட்டம்

சுற்றுலா, வணிகம், அதிகாரப்பூர்வ பயணங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விசாக்களும் அந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு நிறுத்தப்படவுள்ளது.

3 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை விதிக்க பிரித்தானியா அதிரடி திட்டம்

பிரித்தானியா தனது புகலிட மற்றும் குடியேற்ற கொள்கைகளில் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக, அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு அனைத்து விதமான விசாக்களும் தடை செய்யப்பட உள்ளன.

உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இந்த நாடுகள் தங்களின் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மற்றும் குற்றவாளிகளை திரும்பப் பெற மறுப்பது காரணமாகவே இந்த விசா தடை அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“பிரித்தானியாவின் விதிகளைப் பின்பற்றாத நாடுகளுக்கு இனி எந்த விசா சலுகையும் இல்லை. எங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை தங்கள் நாடு திரும்பப் பெறவில்லை என்றால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்” என மஹ்மூத் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவின் இந்த புதிய அணுகுமுறை, டென்மார்க் பின்பற்றும் கடுமையான புகலிட கொள்கையைப் போன்றதாகும். இனிமேல் போர், அரசியல் குழப்பம், கலகம் போன்ற சூழ்நிலைகளில் இருந்து தப்பி வரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அல்ல, தற்காலிக பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.

இதனால் இரண்டாம் உலகப் போர் காலத்துக்குப் பின் பிரித்தானியாவின் குடியேற்றச் சட்டத்தில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடைபெறவுள்ளதாக கருதப்படுகிறது. இந்த மாற்றங்கள் குறித்து மஹ்மூத் நவம்பர் 17 அன்று நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் கடுமையான குடியேற்ற கொள்கைகளால் பாதிப்படைந்தது என்றும், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் Kristi Noem முன்மொழிந்த திட்டத்திலிருந்து ஈர்ப்பு பெற்றுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சுற்றுலா, வணிகம், அதிகாரப்பூர்வ பயணங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விசாக்களும் அந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு நிறுத்தப்படவுள்ளது.