தனிமை பிரச்சனைக்கு இப்படியொரு தீர்வா? சீனாவில் பிரபலமாகும் பணம் கொடுத்து கட்டிப்பிடிக்கும் சேவை
மன உளைச்சலில் இருக்கும் பெண்களுக்கு எமோஷனல் ஆதரவு வழங்கும் வகையில், “கட்டிப்பிடிக்கும் சேவை” எனும் ஒரு புதிய தொழில் அங்கு வேகமாகப் பரவி வருகிறது.
நவீன வாழ்க்கைமுறையில் தனிமையும் மன அழுத்தமும் அதிகரித்து வருவதால், சீன நகரங்களில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், மன உளைச்சலில் இருக்கும் பெண்களுக்கு எமோஷனல் ஆதரவு வழங்கும் வகையில், “கட்டிப்பிடிக்கும் சேவை” எனும் ஒரு புதிய தொழில் அங்கு வேகமாகப் பரவி வருகிறது.
‘மேன் மம்’ (Man Mum) என்று அழைக்கப்படும் இந்த சேவையில், பயிற்சி பெற்ற இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களை கட்டியணைத்து அவர்களின் பிரச்சனைகளை கவனமாகக் கேட்டு ஆறுதல் அளிக்கின்றனர். இது எந்தவித ரொமான்டிக் நோக்கத்துடனும் செய்யப்படுவதில்லை; முழுக்க மனநலம் மற்றும் உணர்ச்சி ஆதரவுக்காக மட்டுமே செய்யப்படுவது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் அலுவலக அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த அரவணைப்பு சேவையை நாடும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சீன சமூக வலைத்தளங்களில் இந்த சேவை குறித்து பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஐந்து நிமிட கட்டிப்பிடிப்பிற்கு 20 முதல் 50 யுவான் (₹250–₹600) வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு மாணவி தனது தனிப்பட்ட அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்ததன் பிறகு இந்த யோசனை பிரபலமடைந்தது. ஆரம்பத்தில் நண்பர்கள் இடையே நடந்துவரும் இந்த நடைமுறை, பின்னர் ஆன்லைன் சாட் தளங்கள் மூலமாக ஒரு பிசினஸாக மாற்றப்பட்டது. பெண்கள் பொதுவாக பூங்கா, மெட்ரோ நிலையங்கள் அல்லது மால்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் இந்த ஆண்களைச் சந்தித்து சில நிமிடங்கள் அல்லது சில வேளைகளில் நேரம் முழுவதும் தங்கள் மன உளைச்சலைப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
அலுவலக நேரத்தைத் தாண்டி வேலை செய்த பிறகு இந்தச் சேவையைப் பயன்படுத்திய பெண்கள், “அவர் என்னைக் கட்டியணைத்து என் பிரச்சனைகளை அமைதியாகக் கேட்டார்; அதுவே எனக்கு பெரிய நிம்மதியை தந்தது” என கூறுகின்றனர்.
சீன இளைஞர்களின் வாழ்க்கையில் தனிமை, வேலை நிரந்தரமின்மை, அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் உணர்ச்சி ஆதரவு இல்லாமை போன்ற பிரச்சனைகள் எந்தளவுக்கு பெரிதாகியுள்ளன என்பதற்கு இந்தப் போக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. சில பெண்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் காபி, சிற்றுண்டி அல்லது சிறிய பரிசுகளையும் வழங்குகின்றனர்.
இதே நேரத்தில், இந்தச் சேவைக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். சமூக மற்றும் கலாச்சார மரபுகளைக் காரணம் காட்டி, இத்தகைய சேவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பழமைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Editorial Staff