71 வயது அமெரிக்க பெண் இந்தியாவில் எரித்துக்கொலை - கூலிப்படை ஏவி கொன்ற காதலன்

ருபிந்தருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் (75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

71 வயது அமெரிக்க பெண் இந்தியாவில் எரித்துக்கொலை - கூலிப்படை ஏவி கொன்ற காதலன்

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியை சேர்ந்த பெண் ருபிந்தர் கவுர் பாந்தர். 71 வயதான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் ருபிந்தருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் (75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கிரேவாலும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவருக்கு ருபிந்தருடனான பழக்கம் காதலாக மாறி உள்ளது.

ருபிந்தரை பார்க்க கிரேவால் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த நிலையில் கிரேவால் திருமணத்தை தனது சொந்த ஊரான இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள தனது கிராமத்தில் வைத்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ருபிந்தர் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாயமானார். அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லாததால் சந்தேகமடைந்த ருபிந்தரின் மூத்த சகோதரி கமல் கைரா புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் மாயமான ருபிந்தரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது கிரேவாலின் செல்போனில் இருந்து குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு அழைப்புகள் சென்றதை கண்டுபிடித்த போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவர் கிரேவால் தூண்டுதலின் பேரில் ருபிந்தரை எரித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ருபிந்தரை காதலிப்பதுபோல் நடித்து கிரேவால் அவரிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்றுள்ளார்.

ருபிந்தரிடம் இருந்து மேலும் பணத்தை அபகரிக்கும் நோக்கில் அவரை இந்தியாவுக்கு வரவழைத்த கிரேவால் பஞ்சாப்பின் மல்காபட்டி பகுதியை சேர்ந்த சுக்ஜீத் சிங் சோன் என்பவரை அணுகி உள்ளார். அவரது திட்டப்படி இந்தியா வந்த ருபிந்தரை சுக்ஜீத் சிங் சோனு கொலை செய்துவிட்டு அவரது உடலை டீசல் ஊற்றி எரித்துள்ளார்.

எஞ்சிய பகுதிகளை கிராமத்தில் உள்ள வடிகாலில் வீசிதாக சுக்ஜீத் சிங் சோன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும் ருபிந்தரை கொலை செய்வதற்காக கிரேவாலிடம் இருந்து ரூ.50 லட்சம் பேரம் பேசியதாகவும், அதை நம்பி அவரை கொலை செய்ததாகவும் சுக்ஜீத் சிங் சோன் போலீ ரிடம் தெரிவித்தார்.

அவரை கைது செய்த போலீசார் ருபிந்தரின் எலும்பு கூடுகளை மீட்டு, தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சரஞ்சித் சிங் கிரேவாலை தேடி வருகின்றனர்.